ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு




 


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (18) காலை 10.45 மணியளவில் கவனயீர்ப்பு செயற்பாட்டை மேற்கொண்டிருந்தனர். மேலும் அதனை தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தங்கள் கோரிக்கை மகஜர் கையளிக்கப்பட்டது.
கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் (07.06.2024) அன்று உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக  மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்.
முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  
காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும்  பல சமூக அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களும்  கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்தும் குறித்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியுமே இன்றைய தினம் கவனயீர்ப்பு செயற்பாடு மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு மகஜர் கையளிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.