”கிழக்கில் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பெறும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்”







வி.சுகிர்தகுமார் 0777113659  

 கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தலைவிதியை மாற்ற வேண்டும் என புறப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி எனும் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை பலப்படுத்தி ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயற்குழு உறுப்பினர் த.நவனீதன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நேற்று (08) இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றினால் மாத்திரமே கல்விப்புலத்தில் உள்ள தேவைகள் நமக்கு தேவையான ஆளனி பற்றாக்குறை நிவர்த்தி பதவி உயர்வுகளை பெறலாம்.
கடந்த கோத்தபாய அரசாங்கம் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 600 சிற்றூழியர்களை நியமிக்கும் அதிகாரத்தை கொடுத்தது. அம்பாரையில் மொட்டில் வந்தவர்கள் 3 இடையில் வந்த முசாரப் ஒருவர் என  2400 பேரை நியமித்துக்கொண்டனர். தமிழர்களுக்கு யாரும் இல்லை. ஒன்றும் இல்லை.
ஆகவேதான் கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பெறும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஏனைய கட்சிகள் இதற்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை. இதற்காகவே இன்று ஆலையடிவேம்பிற்கு வருகை தந்துள்ளேன். இதுபோன்ற பாராட்டு நிகழ்வுகளை நடாத்தி மக்கள் மனங்களிலும் மாணவர்கள் மனங்களிலும்; மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
மட்டக்களப்பில் மாத்திரம் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் உள்ளது. அதற்கு காரணம் உண்டு. அந்த மக்கள் எனக்கு ஆணையினை வழங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தடுத்து நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதை யாரும் தடுக்க முடியாது. மக்கள் ஆணை தொடர்ந்தும் எனக்கு கிடைக்கும் என நம்புகின்றேன்.
ஆனாலும் எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்திலும் கல்வி உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இங்கு உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் அம்பாரை மாவட்ட மக்கள் தலைவர் சந்திரகாந்தனின் வருகையினை அழைத்து காத்திருக்கின்றனர். ஆகவே தொப்புள் கொடி உறவுகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கிருக்கிறது. கட்டிக்காக்கும் பொறுப்பு இங்குள்ள சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்களுக்கு இருக்கின்றது என்றார்.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கே.பிரபாகரன் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச உறுப்பினர் சிவகுமார் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளுக்கு பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன் பின்னராக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் பல்வேறு கல்வி அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் 77 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.