இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின





2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது.

எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது.

வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.

இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.



படக்குறிப்பு,வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.
இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு?
முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 ரன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும்.

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27-ஆம் தேதி 88% மழைக்கும் 18% இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும்.

கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. மழையின் குறுக்கீட்டால் டி.எல்.எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 119 ரன்கள் சேர்க்க வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

குரூப்-1 பிரிவில் அரையிறுதிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் 2-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்றொரு அணிக்கு அரையிறுதிக் கதவை திறக்கும் வகையில் இருந்தது. ஆனால், இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராகப் பதவி ஏற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட்டுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ இருந்துள்ளார்.


படக்குறிப்பு,"நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் ரஷித் கான்
‘நம்பமுடியவில்லை, சாதனைதான்’
வெற்றிக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், உலகக் கோப்பை அரையிறுதி செல்வது தங்களுக்குக் கனவாக இருந்தது என்றார்.

“அந்த நோக்கில்தான் போட்டித் தொடரைத் தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை நியூசிலாந்தை வென்றதும் உறுதியானது. இப்போதும் நம்பமுடியவில்லை. நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார். நான் ஒரு பார்ட்டியில் அவரைச் சந்தித்தபோது, உங்கள் கணிப்பைப் பொய்யாக்கி தலைகுனிவை ஏற்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தேன்,” என்றார்.

மேலும், “130 ரன்கள் சேர்த்தாலே இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோர். ஆனால் எங்களால் 115 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. வங்கதேசம் எங்களுக்குக் கடினமான சவால் அளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும், அதனால் எங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கினோம். எங்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினோம். ஒவ்வொரு வீரரும் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்,” என்றார்.

“புதிய பந்தில் பரூக்கியும், நவீனும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். குல்புதீன் நயீப் எடுத்தவிக்கெட் எங்களுக்கு அந்த நேரத்தில் விலைமதிப்பில்லாதது. நாங்கள் தாய்தேசம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. அரையிறுதி என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரையிறுதி வரை வந்திருந்தோம். இப்போது உலகக் கோப்பையில் வந்திருப்பது எங்களைப் பொருத்தவரை சாதனைதான். எங்கள் தேசத்துக்கு திரும்பும் அந்த நாளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தெளிவான மனநிலை, திட்டமிடலுடன் அரையிறுதிப் போட்டிக்குச் செல்வோம், அந்த தருணத்தை அனுபவிப்போம்,” எனத் தெரிவித்தார்.

மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?

படக்குறிப்பு,பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது
ஆட்டநாயனுக்கு போட்டி
ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டநாயகன் விருது நவீன் உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டது. பேட்டிங்கில் ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆப்கானிஸ்தானை கவுரவமான ஸ்கோரைப் பெற உதவியது. இருப்பினும் முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்திய நவீனுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பவர்ப்ளே ஓவரில் மூன்றாவது ஓவரிலேயே நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சால் கேப்டன் ஷான்டோ, சஹிப் அல் ஹசன் இருவரின் விக்கெட்டையும், கடைசி நேரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது விக்கெட்டையும் வீழ்த்தி வங்கதேச அணியை நெருக்கடியில் சிக்கவைத்தமைக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நம்பிக்கையளிக்கும் ஜோடி
ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை வழக்கம்போல் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ்-இப்ராஹிம் ஜாத்ரன் நல்ல தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன் சேர்க்க திணறிய ஆப்கானிஸ்தான், பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது
ரஷித் கானின் 3 சிக்ஸர்கள்
அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்களும், ஜாத்ரன் 18 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 10 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். ரஷித்கானின் 3 சிக்ஸர்களால்தான் ஆப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்து கவுரவமான ஸ்கோரைப் பெற்றது. இல்லாவிட்டால், 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.

பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது. பந்துகள் தாழ்வாகவும், மெதுவாகவும் பேட்டர்களை நோக்கி வந்ததால் பேட் செய்யவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் கடினமாக இருந்தது. அதிலும் பந்து தேய்ந்தபின் பெரிய ஷாட்டை அடித்தாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி செல்வது கடினமாக இருந்தது. வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட்டுகளை இழந்த வங்கேதசம்
116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது. பரூக்கி வீசிய 2-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் டக்அவுட் ஆகினார்.

நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஷான்டோ (5), அனுபவ பேட்டர் சஹிப் அல்ஹசன் (0) விக்கெட்டை இழந்தனர். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. 4வது ஓவர் வீசப்பட்டபோது மழைக் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.


படக்குறிப்பு,11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது
ரஷித் கான் மாயஜாலம்
மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தைக் கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை ரஷித்கான் நெருக்கடியில் தள்ளினார். ரஷித்கான் பந்துவீச்சில் 10 ரன்னில் சவுமியா சர்க்கார் போல்டாகினார், ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் ஹிர்தாய் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் மெகமதுல்லா (6), ரிஷாத் ஹூசைன் கிளீன் போல்டாகி ஒரே ஓவரில் இருவரும் வெளியேறினர். 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோல்வியில் பிடியில் சிக்கியது.

11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது டிஎல்எல் விதிப்படி ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு வங்கதேசத்துக்கு இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 80 ரன்களை வங்கதேசம் சேர்த்துவிட்டதால், 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது.

உலகக் கோப்பை டி20பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது
லிட்டன் தாஸ் போராட்டம்
தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 15-வது ஓவரில் தன்சிம் ஹசன் விக்கெட்டை குல்புதீன் நயீப் எடுக்கவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.குல்புதீன் வீசிய 17-வது ஓவரில் லிட்டன் தாஸ் 4 ரன்கள் சேர்த்தார். 12 பந்துகளில் வங்கதேசம் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை நவீன் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் தஸ்கின் அகமது தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜில் போல்டாகியது. வங்கேதசம் 9-வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அடுத்து களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான், நவீன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி அவுட் ஆகவே, ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டித்தழுவி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். குர்பாஸ் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின
மிகக் குறைவான ஸ்கோரை அடித்தபோதிலும் வலுவான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்சு மூலம் வங்கதேசத்தைச் சுருட்டி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதி சென்றது. ரஷித்கான் நடுப்பகுதி ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், நவீன் உல்ஹக் பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

லிட்டன் தாஸ் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போராடியும் கடைசிவரை அவருக்கு ஒத்துழைக்க வீரர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் வெற்றி வங்கதேச மக்களின் இதயத்தை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது, என்றே சொல்லவேண்டும்.