காரைதீவு சோக மயம்





காரைதீவைச் சேர்ந்த இரு இளம் வைத்தியர்கள் இரு நாட்களில் தொடர்ச்சியாக அகால மரணமடைந்த மையினால் காரைதீவு சோகத்தில் மூழ்கியுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த  சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன் கடந்த (14) வெள்ளிக்கிழமை காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தமை தெரிந்ததே.
சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் என்பதும் 
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 


அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை வரும்பொழுது பொத்துவில்  லாகுகலை  நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த  சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன்  அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது.

அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது.

காரைதீவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு   சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நீண்ட இரங்கல் நிகழ்வும் நடைபெற்றது 

இறுதியில் காலை 10.30 மணியளவில் இறுதி யாத்திரை நடைபெற்று காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இரண்டாவது மரணம்!

இதேவேளை
காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் நற்பிட்டிமுனை ஆசிரியை விஜயலட்சுமி தம்பதியினரின்  மூத்த புதல்வன்  டாக்டர் இ. தக்சிதன் எனும் 34 வயதுடைய வைத்திய அதிகாரி அகால மரணமடைந்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.தக்சிதன் தமது குடும்பத்துடன் உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் அலை பாய்ந்தவேளையில் தவறிவீழ்ந்த காரணத்தினால் இம் மரணம் சம்பவித்திருக்கின்றது .

இவருக்கு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.மிதுரன் எனும் சகோதரனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிலும்  நிஷாகரி எனும் சகோதரியும் உள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர் மரணங்களால் காரைதீவு முழுக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இவர்கள் ஆத்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்