உள்ளுராட்சி மன்றங்களின் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணி




 


( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.

 அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் மாவட்டம் மாவட்டமாக சந்தித்து வருகின்றார்.

 அந்த வகையில் அம்பாறை மாவட்டத்துக்கான சந்திப்பு நேற்று முன்தினம் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் .மணிவண்ணன் அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி உள்ளிட்ட உரயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 அச்சமயம் காரைதீவு சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  " கொரோனா காலகட்டத்தில்  எமது  ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார் . இரண்டு குழந்தைகளின் தந்தை அவர். குடும்பம் நிர்க்கதியான நிலையில் நடுவீதிக்கு வந்திருந்தது. அதன் காரணமாக அவரது மனைவியை தற்காலிகமாக பணிபுரிய உதவினோம். இன்றும் பணியாற்றி வருகிறார்.முடிந்தால்  அவரை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததற்கு அங்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது .

மேலும் ஆளுநர் எங்களது பதவிக்காலம் முடிந்தாலும் எங்களை அரவணைத்து எங்களை உள்வாங்கி இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்வது வரவேற்புக்குரியது. நன்றி கூறுகின்றோம் என்று சொன்னார். அதுக்கு பதிலளித்த ஆளுநர் இது உங்கள் காலத்தில் உங்களால் ஆரம்பிக்கப்பட்ட கோரிக்கை .ஆகவே தான் உங்கள் முன்னிலையில் இவர்களை நிரந்தரம் ஆக்க வேண்டும் என்ற சிந்தனையில் உங்களை அழைத்து இருக்கின்றேன் .

ஆகவே அதற்கான வேலைகள் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறும் என்று கூறினார்.