கலை இலக்கிய ஆளுமை சுலைமா சமி இக்பால் மறைவு




கிரிகதெனிய, மாவனல்ல சுலைமா சமி இக்பால்  காலமானார். இவர் மூத்த இலக்கியவாதியும் மௌலவியுமான மர்ஹும் சமி அவர்களின் புதல்வியும்,மௌலவி இக்பால் அவர்களின் மனைவியும், தென் கிழக்கு பல்கலையின் முன்னாள் பட்டதாரியான சம்மாந்துறையில் வசித்து வரும் இன்சிரா அவர்களது தாயும் ஆவார்

சுலைமா ஏ.சமி, இக்பால் களுத்துறை, தர்காநகரைப் பிறப்பிடமாகவும் மாவனல்லை கிரிகதெனியவை வசிப்பிடமாகவும் கொண்டவர்


 எழுத்தாளர். இவரது தந்தை அப்புதுல் சமி.; தாய் உம்மு தமீமா. களுத்துறை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் கற்றார். இதே பாடசாலையில் ஆசிரியராகவும் கடமைபுரிந்துள்ளார். பதினோராவது வயதில் துணுக்கொன்றை தினகரன் பத்திரிகைக்கு எழுதி அது வெளிவரவே அதைத்தொடர்ந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். சிறுகதை, நாவல் ஆகியத்துறைகளில் ஈடுபாடுகொண்டவர். 

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் பிரதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரின் ஆக்கம் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமி சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

 எழுத்துத்துறையை அங்கீகரிக்கும் முகமாக மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்துக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார். வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசைமாறிய தீர்மானங்கள் (2003), உண்டியல் (2018) ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் ஊற்றை மறந்த நதிகள் (சமூக நாவல் 2009), நந்தவனப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் 2015) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் சுலைமா ஏ.சமி. இவரின் ஆறு நூல்களில் நந்தவனப் பூக்கள் சிறுவர் இலக்கிய நூலை கல்வி அமைச்சு பாடசாலை நூலகப் புத்தகமாக அங்கீகரித்துள்ளமை விசேட அம்சமாகும்.

விருதுகள்

2008ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் இவரது ”ஊற்றை மறந்த நதிகள்” நாவலுக்கு சிறப்புப்பரிசு கிடைத்தது. 2002ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலக்கிய பங்களிப்புக்கான விருது. அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2008ஆம் ஆண்டு கலாஜோதி பட்டமும் விருதும். 2014ஆம் ஆண்டு அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனத்தால் காவிய பிரதீப பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.