க.பொ.த. உயர்தரத்தில் சிறப்பு சித்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட வைத்தியத்துறை, சட்டத்துறை மற்றும் உயர் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர்தரத்தில் சிறப்பு சித்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட வைத்தியத்துறை, சட்டத்துறை மற்றும் உயர் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இம்முறை 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் பாடசாலை ரீதியாக பாடத்துறையில் முதலிடங்களை பெற்ற மாணவர்கள் 13 பேர் மாத்திரம் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
ஆலயத்தின் தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நீதிபதி த.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட திட்ட பொறியியலாளர் ந.லோகிஸ் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கதிரியக்கவியல் நிபுணர் கோ.சாருலதன் விசேட அதிதிகளாகவும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் சுதாகரன் இந்துமாமன்ற தலைவர் தணிகாசலம் அதிபர்களான சண்டேஸ்வரன் மற்றும் தயாரூபன் நேசராஜா கணக்காய்வாளர் கோபாலபிள்ளை உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசியினை ஆலய உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ சுதர்சன் குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கேதீஸ்வரக்குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னராக கௌரவ நீதிபதி அவர்கள் ஆலய நிருவாகம் மற்றும் திருப்பணிச்சபை மகளிர் அணியினரின் ஏற்பாட்டில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன் பின்னராக கல்வி சாதனையாளர் கௌரவிப்பு விழா இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய நீதிபதி மற்றும் குருமார்கள் ஆலய நிருவாகம் முன்னெடுக்கும் கல்வி அபிவிருத்திக்கான பணியை பாராட்டியதுடன் பல்கலைகழக மாணவர்களை வாழ்த்தி ஒழுக்கமுடைய எதிர்கால அரச அதிகாரிகளாக வரவேண்டும் என அறிவுரை வழங்கினர்.
ஆலயத்தில் நடைபெற்றுவரும் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டு இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.