இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை பெற்றது.
இதில் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கிய சினிமா பிரபலங்கள் பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அதில் முதல்முறை போட்டியிட்டதிலேயே வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது சொந்த ஊரான மண்டி தொகுதியில் (ஹிமாசலப் பிரதேசம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கங்கனா ரணாவத்
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கங்கனா 5,37,022 வாக்குகள் பெற்றார். விக்ரமாதித்ய சிங் - 4,62,267 வாக்குகள்.
தனது வெற்றிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கங்கனா ரணாவத் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அன்பையும், நம்பிக்கையையும் கொடுத்து தனக்கு ஆதரவு அளித்த மண்டி தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய வெற்றி. பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையின் வெற்றி. இது சநாதனத்துக்கான வெற்றி. மண்டி தொகுதிக்கு கிடைத்த பெருமை என கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
அருண் கோயல்
ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து பலரின் கவனம் பெற்றவர் அருண் கோயல். இவர் இம்முறை பாஜக சார்பில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜவாதி கட்சியை விட 10,585 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பச் சுற்றுகளில் பின்னடைவில் இருந்த இவர், 5,46,469 வாக்குகள் பெற்றார். இவரிடம் தோற்ற சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் சுனித வெர்மா 535884 வாக்குகள் பெற்றார்.
வெற்றிக்கு பிறகு பேசிய அருண் கோயல், தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் நன்றி. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
ஹேமமாலினி
ஹிந்தி சினிமாவின் கனவு கன்னியாக இருந்த ஹேமமாலினி, அரசியலிலும் தனது மூன்றாவது வெற்றியின் மூலம் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமலாலினி, 2,93,407 வாக்குகள் என்ற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முகேஷ் தாங்கர் 2,16,657 வாக்குகள் பெற்றார்.
வெற்றிக்கு பிறகு பேசிய அவர், மூன்றாவது முறையாக மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. மதுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இடைநின்ற பணிகளை தொடர்வதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சத்ருகன் சின்ஹா
பிகாரில் பிறந்த சத்ருகன் சின்ஹா தனது நடிப்புக்காக பல்வேறு விருதுகளைப் பெற்று ரசிகர்களின் அங்கீகாரம் பெற்றவர். மக்களவைத் தேர்தலில் தனது வெற்றியின் மூலம் அரசியலிலும் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோல் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங்கை விட 59,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சத்ருகன் 6,05,645 வாக்குகளைப் பெற்றார்.
இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் திவாரி
போஜ்புரி சூப்பர் ஸ்டார் மனோஜ் திவாரி, 3வது முறையாக தொடர்ந்து தனது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
தில்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தனக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்னையா குமாரை விட 1,38,778 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். மனோஜ் திவாரி 8,24,451 வாக்குகளைப் பெற்றார்.
வெற்றிக்கு பிறகு பேசிய அவர், என் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தில்லி 7 தொகுதிகளையும் எங்களுக்கு (பாஜக) கொடுத்துள்ளது. தில்லி மக்களுக்காக நாங்கள் உழைப்போம். இது மிகவும் கடினமாக தேர்தல். இது மக்களின் வெற்றி. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஏமாற்றியதால் அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
ரவி கிஷண்
திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ரவி கிஷண், இம்முறை நடந்த மக்களவைத் தேர்தலில் 1,03,526 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரவி கிஷண், 5,85,834 வாக்குகளைப் பெற்றார். சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த காஜல் நிஷாத் 4,82,308 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
சுரேஷ் கோபி
தேர்தலில் வென்ற பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் கேரள நடிகர் சுரேஷ் கோபி. அதுவும் கேரளத்தில் முதல் பாஜக எம்.பி. என்ற வரலாற்று சாதனையுடன் வென்றார்.
கேரள மாநிலம் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, இடதுசாரி வேட்பாளரை விட 74,686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுனில் குமார் 3,37,652 வாக்குகளைப் பெற்றார். சுரேஷ் கோபி, 4,12,338 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
2016 முதல் 2022 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்காலி நட்சத்திரங்கள்
பெங்காலி திரைப்படத் துறையில் இருந்து நடிகர் தேவ் அதிகாரி, ஹிரன் சாட்டர்ஜி, லாக்கெட் சாட்டர்ஜி, ரச்னா பானர்ஜி, ஜுன் மலியா மற்றும் சதப்தி ராய் ஆகியோர் மக்களவைத் தேர்தல் மூலம் அரசியலில் அறிமுகமாகினர்.
போஜ்புரி நடிகர் பவன் சிங், பிகார் மாநிலம் காரகட் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாராம் சிங்கால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
வெற்றியோ, தோல்வியோ சினிமா துறையிலிருந்து அவர்கள் அரசியலில் கால் பதித்துவிட்டனர் என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கிறது.
Post a Comment
Post a Comment