ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் 'உறுமய' பூரண காணி அளிப்புகள் வழங்கும் நடமாடும் சேவை




 


.சுகிர்தகுமார் 0777113659 

 பிறந்த மண்ணின் உரிமை உங்களுக்கே எனும் கருப்பொருளில் 'உறுமய' எனும் பெயரில் நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் பூரண காணி அளிப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட சுவர்ணபூமி, ஜயபூமி, இரத்தினபூமி, அளிப்புக்கள் மற்றும் உத்தரவுப்பத்திரங்கள் போன்றவற்றிற்குப் பதிலாக பிரதேச செயலகத்திற்கு வருகைதராமல் வேறு நபர்களுக்கு நேரடியாக நொத்தாரிசு மூலம் உரிமைமாற்றம் செய்யக்கூடிய 'உறுமய' எனும் பெயரில் பூரண அளிப்புகள் வழங்கும் திட்டம் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக பொதுமக்களின் நன்மை கருதி அவர்களது ஆவணங்களை பெற்றுக்கொண்டு உறுமய அளிப்புக்களை வழங்கும் பொருட்டு; பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தோறும் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தினால்   2024.06.26 ஆம் திகதி தொடக்கம் 2024.06.30ஆம் திகதிவரை பூரண அளிப்புகள் வழங்குவதற்காக நடமாடும் சேவை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வும் இன்று (26) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இன்று அக்கரைப்பற்று 7ஃ2 பிரிவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் காணி உத்தியோகத்தர் லோஜினி கோகுலன் மற்றும் காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற காணி அளிப்புக்கள் வழங்கக்கூடிய ஆவணங்களின் பிரதிகள் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டதுடன் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் காணி பிணக்குகள் உள்ளவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதேநேரம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடமாடும் சேவை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளதுடன் அத்தினங்களில் குறித்த ஆவணங்களுடன் வருகை தந்து காணி அளிப்பினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுகொள்வதாக பிரதேச செயலாளர் இங்கு தெரிவித்தார்.