மாணவனின் புத்தாக்க கண்காட்சியும் பாடசாலைக்கான பேண்ட் வாத்திய கருவி கையேற்பு நிகழ்வும்





வி.சுகிர்தகுமார் 0777113659 


  மாணவனின் புத்தாக்க கண்காட்சியும் பாடசாலைக்கான பேண்ட் வாத்திய கருவி கையேற்பு நிகழ்வும் அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் நேற்று(6) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் குருபிரதீபா பிரபா தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் பேன்ட் வாத்தியத்தை அன்பளிப்பாக பெற்றுக்கொடுத்த கோளாவில் 3 வெற்றிவேல் சிவபாதன் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் யோகராஜன் அதிபர் ஜனார்த்தனன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மரக்;கன்றுகள் அதிதிகளால் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன. பின்னராக பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பேன்ட் வாத்தியம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன் பின்னராக வான்ட் வாத்தியத்தை பெற்றுக்கொடுத்த சிவா என்பவரின் தாயார் அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேநேரம் மதியழகன் மொபிஸ்டன் எனும் மாணவனினால் உருவாக்கப்பட்டு புத்தாக்கக் கண்காட்சியில் வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அதிதிகள் பார்வையிட்டதுடன் அம்மாணவனால் வரையபட்ட ஓவியங்களையும் பார்வையிட்ட அதிதிகள்  மாணவனுக்கு மாலை அணிவித்து பாராட்டினர்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய அதிதிகள் புத்தாக்க செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் இவர் போன்ற மாணவர்களே எதிர்காலத்தில் நம் நாட்டிற்கு தேவையானவர்கள் எனவும் புகழாரம் சூட்டினர்.