மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில்




‌ 

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால் குளிர்பான கொள்வனவில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சாத் காரியப்பர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவுகள் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படும் உணவு மாதிரிகளில் மனித பாவனைகளுக்கு பொருத்தமில்லாத பொருட்களை மக்கள் மயப்படுத்த வேண்டிய தார்மீக கடமை எனக்குள்ளது. அதனால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் பாரியளவு உள்ளது. இதனால் அதிகமாக சிறு குழந்தைகள் சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிப்படைகின்றனர். எனது தலைமையிலான குழு கடந்த உணவு சுற்றி வளைப்பின் போது கைப்பற்றிய குடிபான மாதிரி பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது.

பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட அந்த மாதிரி குடிபானம் மனித பாவனைக்கு பொருத்தமற்றது. அதில் அதிகமான sulphur கந்தகத்தை கொண்டுள்ளது. அதிக கந்தகம் பாரிய சுகாதார சீர்கேடுகளை கொண்டு வரும். இது மாதிரியான குடிபானங்கள் திருமண மண்டபங்களில் அதிகம் பாவனையில் உள்ளது. அதிக லாபம் பெறுவதற்காக கடைகளிலும் இவ்வகை குடிபானங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகை குடிபானங்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது மக்களுக்கான விழிப்புணர்வு அறிவித்தல் என்பதுடன் இவ்வாறான உணவு தயாரிப்பு, விற்பனை நிலையங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும். மேலும் இது தொடர்பிலான முழு விபரங்கள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பெற அலுவலக நேரங்களில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை நாடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.