சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி, கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்கா





 ஐபிஎல் டி20 தொடர் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடந்தது. ஒரு சூப்பர் ஓவர் கொண்ட ஆட்டம்கூட நடக்கவில்லை. ஆனால், டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கி 11 ஆட்டங்களே நடந்துள்ள நிலையில் 2-ஆவது சூப்பர் ஓவர் ஆட்டம் நடந்துள்ளது.

டல்லாஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவை எளிதாக பாகிஸ்தான் வென்றுவிடும் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், அணியினருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டும், முதல் போட்டியில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

அமெரிக்க அணி(யுஎஸ்ஏ) சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த சில ஆண்டுகளில் பெற்ற மிகப்பெரிய வரலாற்று வெற்றி இதுவாகத்தான் இருக்க முடியும். பாகிஸ்தானின் பேட்டர்களை தங்கள் பந்துவீச்சால் திணற வைத்து, பந்துவீச்சாளர்களுக்கும் சவாலாக இருந்த அமெரிக்க அணி திறன்மிக்க அணியாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.