இசைத்தமிழ் விழா கொழும்பில்





( வி.ரி.சகாதேவராஜா)

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவையொட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மூன்று நாள் இசைத்தமிழ் விழா  நேற்று (31) வெள்ளிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

துறவற நூற்றாண்டை யொட்டி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் யூ.அனிருத்தனின் ஏற்பாட்டில்  கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்  பிள்ளை  மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(31) முதல் சனி(1) ஞாயிறு(2) தினங்களில் நடைபெறும்.

 முன்னதாக நேற்று (31) பிற்பகல் 4 மணியளவில் சுவாமி விபுலானந்தரின் திருவருவச்சிலையுடன் இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் 
சைவ மங்கையர்வித்தியாலயத்திலிருந்து கொழும்பு தமிழ்ச் சங்கம் வரை ஊர்வலம் இடம்பெற்றது. வழிநெடுக இந்துக்கள் நிறைகுடம் வைத்து வழிபட்டனர்.

 பின்பு 5 மணியளவில் தமிழ்ச் சங்கத்தில் சுவாமி விபுலானந்தரின் சிலை ஆறுமுகநாவலரின் சிலைக்கு இடப் புறமாக திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு தமிழ்ச்சங்க 82 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக நிறுவப்பட்ட இத் திருவுருவச் சிலை, தற்போதைய தலைவரும்  தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி க.இரகுபரன் தலைமையில் நிறுவப்பட்டது.

இச் சிலையை அன்பளிப்பு செய்த சாஹித்தியரத்னா தி. ஞானசேகரன் திருமதி ஞானலக்ஷ்மி ஞானசேகரன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி அரங்க நிகழ்வை ஆரம்பித்து  வைத்தனர்.

தொடர்ந்து சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர்.

முதல் நாள் நிகழ்வு தமிழ்ச் சங்க தலைவர் கலாநிதி க.இரகுபரன் தலைமையில் நடைபெற்றது. அங்கு ஆசியுரையை சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் நிகழ்த்த, வரவேற்புரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையை காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா 
நிகழ்த்த, தொடக்க உரையை மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி நிகழ்த்தினார். சாஹித்தியரத்னா தி. ஞானசேகரன் விசேட உரையாற்றினார்.

 அங்கு சுவாமி தொடர்பான பிரசுரங்கள் அதிதிகள் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்பட்டது.
விசேட கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.

பேராசிரியர்களான  சிவலிங்கராஜா மகேஸ்வரன் முன்னாள் பணிப்பாளர் உடுவைதில்லை நடராஜா மற்றும் பல அறிஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவரது பாரியார் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அங்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.