கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூன் 30ஆம் திகதி திறக்கப்படும்!






உகந்தையில் நேற்று தீர்மானம்!
(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும்.
மீண்டும் அது ஜூலை 11 ஆம் திகதி மூடப்படும் .

முன்னர் இப் பாதை திறக்கப்படும் திகதி யூலை 1 ஆம் திகதி என மொனராகலையில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

இதனை காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா ஆகியோர் சபையில் எழுந்து இக்காலம் போதாது அது ஒருநாள் முந்தி மாற்றப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பலனாக இரு மாவட்ட அரசாங்க அதிபர்களும் கலந்துரையாடி இத் தேதி 30 ஆம் திகதி யாக மாற்றப்பட்டது.

நேற்று (7)  வெள்ளிக்கிழமை உகந்த மலை முருகன் ஆலயத்தின் காரைதீவு மடத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில்  
 இடம் பெற்ற கூட்டத்தில் மேற்படி இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான
முன்னோடிக்கூட்டம் நேற்று 7ஆம் திகதி   பகல் உகந்தை முருகன் ஆலய
வளாகத்தில் நடைபெற்றது.  புதிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்  பிரதேச செயலாளர்கள் படை அதிகாரிகள் மதப் பெரியார்கள் திணைக்களத் தலைவர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உகந்தை மற்றும் கதிர்காமம்  முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  ஜுலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 22  திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.