தலைவர் அஷ்ரபின் மரண நாளை போன்றே ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸியின் மரண நாளும் எங்களை பாதித்துள்ளது - மு.கா பிரதிதத்தலைவர் ஹரீஸ் இரங்கல் !
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸியின் காலமான செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். இஸ்லாமிய நாடுகளில் மிகவும் தைரியமான, மனிதாபிமானமிக்க தலைவராக திகழ்ந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸி உலங்கு வானூர்தி விபத்தில் காலமான செய்தி மிகவும் கவலைத் தருகிறது. 2021 முதல் ஈரான் அதிபராக வந்த பின்னர் இஸ்லாமிய உலக நாடுகளை ஐக்கிப்படுத்துவதிலும், ஒற்றுமைப்படுத்துவதிலும் முன்னின்றவர். குறிப்பாக ஈரான், சவூதி அரேபியா உட்பட சில மத்திய கிழக்கு நாடுகளின் உறவு முறிந்திருத்த சூழ்நிலையில் அதனை சீர்படுத்தி அந்த நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணி சகலரையும் ஒற்றுமைப்படுத்தியதில் முதன்மையானவராக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸி திகழ்ந்தார்.
காஸா சகோதர்களை அழிக்க இஸ்ரேலிய கொடுங்கோலன் நெதன்யாஹு ஆரம்பித்த பலஸ்தீனுக்கு எதிரான யுத்தத்தில் காஸா முஸ்லிங்களுக்காக குரல்கொடுத்தது மட்டுமின்றி காஸாவுக்கு ஆதரவாக இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி காஸா மக்களுக்கு ஆதரவாக பக்கபலமாக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸி நின்றிருந்தார்.
உலகில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் பலமானதாக ஆயுத ரீதியாகவும் அனுவாயித ரீதியாகவும் ஈரானை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருந்தவர். எமது நாட்டுக்கும் உமா ஓயா திட்டத்தினூடாக மின்சாரம், விவசாயம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு ஈரான் அரசும், மக்களும் உதவியாக இருந்தார்கள். அதனை தொடக்கிவைக்க அண்மையில் இலங்கை வந்த போது அவர் நிகழ்த்திய உரைகள் கனதியானது.
ஜனாதிபதி ரணிலின் இராப்போசன விருந்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸி அவர்களை நேரில் சந்தித்த அவரின் கருத்துக்களை செவிமடுத்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. முஸ்லிங்களின் உரிமைக்காக பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்படுமாறும், தான் துஆ செய்வதாகவும் அவர் கூறிய வார்த்தைகளின் நிழல்கள் அவரின் மரணச்செய்தி கேட்ட நிமிடம் முதல் என்னுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
காலநிலை காரணமாக விமான பயணங்களை தவிர்த்து இலங்கையில் கூட பாதுகாப்பு எச்சரிக்கையாக இருந்த அவர் இன்று ஹெலியில் சென்று மரணமான செய்தி எனக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. எங்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் இலங்கை முஸ்லிங்களுக்கு முகவரி பெற்றுக்கொடுத்து, முஸ்லிங்களின் குரலாக ஒலித்து கொண்டிருந்தபோது அரநாயக்காவில் விபத்தில் சிக்கி காலமானாரோ அன்றைய நாளை ஒத்த நாளாகவே இன்றைய நாட்களும் எங்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைஸி அவர்களின் மரண காட்சிகள் எங்கள் பெருந்தலைவர் அஷ்ரபின் மரண காட்சிகளை நினைவுபடுத்துகிறது. இஸ்லாமிய மக்களின் குரலாக செயற்பட்ட மர்ஹூம் இப்ராகிம் ரைஸி எனும் ஆளுமை எங்களை விட்டு பிரிந்து சென்றுள்ளது. அவர்களின் இழப்பினால் ஈரான் மக்கள் மட்டுமல்ல உலக முஸ்லிங்கள் எல்லோரும் இன்று தவித்துபோகியுள்ளனர். அவருக்காகவும், அவருடன் இறுதிவரை பயணித்து காலமான அவரது அமைச்சர்கள், அதிகாரிகள், வீரர்கள் எல்லோருக்காகவும் எங்களின் பிராத்தனைகள்.
Post a Comment
Post a Comment