திருக்குளிர்த்தி விஞ்ஞாபனம் வெளியீடு






( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.


அதன் போது  பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சடங்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரிடமும் ஏற்பாடு தொடர்பாக கலந்துரையாடினார்.
அங்கு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.

ஆலய தர்மகத்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகன், அனைவரும் இணைந்து இப்பெரும் சடங்கை நடாத்த அழைப்பு விடுத்ததுடன் நன்றியுரையுமாற்றினார்.

இறுதியில் இவ்வருட திருக்குளிர்த்தி விஞ்ஞானம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊர்ப்பிரசித்தம் தொடர்பான பட்டய நிகழ்வு இடம்பெறும்

சடங்குப் பெருவிழா எதிர்வரும்  13ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன்   ஆரம்பமாகின்றது.

இச்சடங்குப்பெருவிழா  தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று   எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 

இரண்டாம் நாள் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
20ஆம் திகதி திங்கட்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் மாலை 3 மணிக்கு பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

மறுநாள்(21) செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 27ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
.

மேலும் இந்நிகழ்வில் கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கர்கள், பரிபாலன சபையினர், பொலிஸ் உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், காரைதீவு பிரதேசத்தில் இயங்குகின்ற அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர், ஊடககர்கள்,பொது அமைப்புக்கள், கழகங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.