ஆப்பிளைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் கூகுள் - ட்ரோன், பிக்ஸல் ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டம்





 தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக, அதன் முன்னெடுப்புகளை நன்கறிந்த ஆதாரங்கள் வாயிலாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலேயே பிக்ஸல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், தானே சொந்தமாக ட்ரோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கும், மேற்குலகிற்கும் இடையே நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் தங்களது விநியோக சங்கிலியை சீனாவுக்கு வெளியே விரிவுபடுத்த எண்ணும் சர்வதேச நிறுவனங்களின் முக்கிய மற்றும் முதன்மை தேர்வாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு பிக்ஸல் மொபைல் உற்பத்தியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் பிக்ஸல் 8 மொபைல் போன்களை தயாரிக்கப் போவதாக திட்டங்கள் உள்ளதாக கூகுள் அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது வலைத்தளத்தில், “பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கான முதன்மையான சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. எனவே எங்களது சிறந்த அதிநவீன ஸ்மார்ட்போன்களை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தது.

“ஆல்பாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள், தனது புதிய அதிநவீன பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும். இந்த ஆண்டுக்குள் உற்பத்தி தொடங்கும்” என்று வெள்ளிக்கிழமையன்று பிபிசிக்கு கிடைத்த தகவல் கூறுகிறது.

கூகுள் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்த தகவல் கூறுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கானின் இரண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னைக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சமீபத்தில் கூகுள் நிறுவன அதிகாரிகள் - தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க உள்ளனர்.