விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து போனது என்று இரானிய அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் திங்கள்கிழமை காலை சம்பவ இடத்தை அடைந்தனர். அப்போது 'நிலைமை சரியில்லை’ என்று இரானின் ரெட் கிரசென்ட் சொசைட்டியின் தலைவர் கூறியிருந்தார்.
இந்த விபத்து நடந்த இடத்தில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க துருக்கி தனது ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) அனுப்பியது. ஓரிடத்தில் ‘வெப்ப மூலம்’ கண்டறியப்பட்ட படங்களை துருக்கி செய்தி முகமை 'அனடோலு' பகிர்ந்துள்ளது.
'வெப்ப மூலம்' என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பு அல்லது அதிக வெப்பம் காணப்படுவதாகும். அதாவது ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் போது அதிலிருந்து எழும் தீ அல்லது புகையை இது குறிக்கிறது.
துருக்கிக்கு கிடைத்த இந்தத் தகவல் இரானுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இரவில் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் 'அனடோலு' வெளியிட்டது. ஓரிடத்தில் கரும்புள்ளி தெரிவதை அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உங்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளுக்கான பதில்களை இங்கு காணலாம்.
ஹெலிகாப்டர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு - இரான் அதிபர் ரைசி பலியாகி இருக்கலாம் என அச்சம்
19 மே 2024
இப்ராஹிம் ரைசி: ஒரு மத அறிஞர் இரான் அதிபர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம்பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,இந்த இடத்தில் விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டரில் யார்யார் இருந்தார்கள்?
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி
வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன்
இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரான ஜெனரல் மாலிக் ரஹ்மதி
தப்ரிஸ் நகரில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை நடத்தும் இமாம் ஆயத்துல்லா மொஹமது அலி அல்-இ ஹாஷெம்
அதிபரின் பாதுகாப்புப் பிரிவு கமாண்டர் சர்தார் செயத் மெஹ்தி மௌசாவி
அதிபரின் மெய்க்காப்பாளர்கள்
ஹெலிகாப்டர் ஊழியர்கள்
ஹெலிகாப்டர் எங்கே விபத்துக்குள்ளானது?
கிஸ் கலாசி மற்றும் கோதாஃபாரின் அணைகளைத் திறந்து வைப்பதற்காக இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு அதிபர் ரைசி சென்றிருந்தார். இந்த விழா முடிந்து அவர் தப்ரிஸ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தப்ரிஸ், இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். தப்ரிஸ் செல்லும் வழியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் தரையில் மோதிய பகுதி தப்ரேஸ் நகரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வர்செகான் நகருக்கு அருகில் உள்ளது.
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,விபத்து நடந்த இடத்தில் அதிகமாக இருந்த பனிமூட்டம்.
உடைந்த பாகங்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏன்?
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மலைப்பகுதிகளிலும் இந்த அடர்ந்த வனப்பகுதியிலும் ஐந்து மீட்டர் வரை மட்டுமே வெறுங்கண்களால் பார்க்க முடிவதாக மீட்புக் குழுவினருடன் இருந்த செய்தியாளர் ஒருவர் கூறினார். அந்த அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் ஹெலிகாப்டர் எங்கே விழுந்தது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஸாவில் போரைத் தொடரும் நெதன்யாகுவுக்கு அமைச்சர் திடீர் மிரட்டல் - ஜூன் 8 வரை கெடு
19 மே 2024
காஷ்மீர்: தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை தீவிரவாத தாக்குதல் - பாஜக ஆதரவாளர் பலி, இருவர் காயம்
19 மே 2024
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம்பட மூலாதாரம்,AA VIDEO - ANADOLU AGENCY
படக்குறிப்பு,துருக்கி செய்தி முகமை அனடோலு, ஒரு இடத்தில் கண்டறியப்பட்ட வெப்ப மூலத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளது.
எந்தெந்த நாடுகள் மீட்பு பணிக்கு உதவ முன் வந்தன?
ஹெலிகாப்டர் விழுந்த இடம் குறித்து ட்ரோன் மூலம் ஆய்வு செய்த துருக்கி, அது பற்றிய விவரங்களை இரானுடன் பகிர்ந்து கொண்டது.
47 நிபுணர்கள் கொண்ட குழு மற்றும் ஒரு ஹெலிகாப்டரை மீட்புப் பணிக்காக ரஷ்யா அனுப்பியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகமும் உதவி வழங்க முன்வந்தது.
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,அமெரிக்க செனட்டர் சக் ஷுமர்
ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா?
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில் தற்போது அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் கூறினார். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு இரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.
வாகன அணியின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக சென்றடைந்துள்ள நிலையில் ரைசியின் ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது எப்படி? என்று சில இரானியர்கள் சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவை வீழ்த்தி இந்தியாவின் முன்னணி வணிக கூட்டாளியாக மாறிய சீனா - எச்சரிக்கும் ஜெய்சங்கர்
ரைசி கடைசியாக யாருடன் காணப்பட்டார்?
விமானம் புறப்படுவதற்கு முன் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் மற்றும் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆகியோர் இரு நாடுகளின் எல்லையில் உள்ள அணையை திறந்து வைத்தனர். இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் இரானுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அஜர்பைஜான் தயாராக இருப்பதாக அதிபர் அலியேவ் கூறினார்.
பிரதமர் மோதி மற்றும் ரைசிபட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,பிரதமர் மோதி மற்றும் ரைசியின் இந்த படம் 2023 ஆகஸ்டில் எடுக்கப்பட்டது.
இந்தியாவின் எதிர்வினை என்ன?
“அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணச் செய்தியால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்தியா- இரான் உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இரான் மக்களுக்கும், ரைசியின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர நேரத்தில் இந்தியா இரானுடன் துணை நிற்கிறது,” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ரைசி மற்றும் ஷாபாஸ் ஷெரீப் பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ரைசி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். படத்தில் ரைசி மற்றும் ஷாபாஸ் ஷெரீப் உள்ளனர்.
பாகிஸ்தான் என்ன சொன்னது?
"மாண்புமிகு அதிபர் சையது இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து இரானில் இருந்து வரும் கவலையளிக்கும் செய்தியை கேட்டேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் நல்ல செய்திக்காக காத்திருக்கிறேன். எங்கள் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும் மாண்புமிகு அதிபர் ரைசி மற்றும் இரானுடன் உள்ளன,” என்று ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா என்ன சொன்னது?
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்திகளை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரானின் உச்ச தலைவர்பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,ஆயத்துல்லா அலி காமனெயி
இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி என்ன கூறினார்?
இந்த விபத்தால் இரானின் நிர்வாகம் பாதிக்கப்படாது என்று ஆயத்துல்லா அலி காமனெயி கூறினார். மக்கள் கவலைப்பட வேண்டாம், அரசு பணிகள் பாதிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
விபத்துக்குப் பிறகு காமனெயி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரக் கூட்டத்தையும் நடத்தினார்.
இரானில் அடுத்து என்ன நடக்கும்?
ரைசி உயிரிழந்தாலும் இரானின் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு கொள்கைகளில் சிறிதளவே தாக்கம் இருக்கும் என்று பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லூயிஸ் டூசெட் தெரிவிக்கிறார்.
இரானில் உச்ச தலைவரிடமே அதிக அதிகாரம் உள்ளது. கொள்கைகளை உச்ச தலைவரே தீர்மானிக்கிறார். இருப்பினும் காமனெயி-யின் வாரிசாகவும் ரைசி பார்க்கப்பட்டார்.
இரானியர்கள் ரைசியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான் 2022 இல் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தபோது, ரைசிக்கு எதிரான கோஷங்கள் அரிதாகவே கேட்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்களின் இலக்காக காமனெயி இருந்தார் என்று பிபிசி பாரசீக சேவையின் ஜியார் கோல் கூறினார்.
ரைசி மரணம் அடைந்தாலும் உச்ச தலைவர் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரான ஜேசன் குறிப்பிட்டார்.
இரான் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, அதிபர் இறந்தாலோ அல்லது பதவியை விட்டு வெளியேறினாலோ, அத்தகைய சூழ்நிலையில் துணை அதிபர் (முகமது முக்பர்) தேர்தல் நடைபெறும் வரை அதிபராக இருப்பார். புதிய அதிபர் 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?
18 மே 2024
வீராணம் ஏரி: வறண்டு விளையாட்டு மைதானமாக மாறிய பிரமாண்ட ஏரி - தூர்வாரக் கோரும் விவசாயிகள்
16 மே 2024
இப்ராஹிம் ரைசிபட மூலாதாரம்,AFP
இப்ராஹிம் ரைசி பற்றிய சில சிறப்பு விஷயங்கள் என்ன?
இப்ராஹிம் ரைசிக்கு வயது 63.
ரைசி 1960 ஆம் ஆண்டு வடகிழக்கு இரானில் உள்ள புனித நகரமான மஷாத்தில் பிறந்தார்.
இந்த நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் மிகவும் புனிதமாகக் கருதும் மசூதியும் உள்ளது. சிறுவயதிலேயே உயர்ந்த நிலையை அவர் அடைந்தார்.
ரைசியின் தந்தை ஒரு மௌல்வி. ரைசிக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை காலமாகிவிட்டார். அவர் ஒரு சமய அறிஞரும் வழக்கறிஞரும் ஆவார்.
தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் தனது 15 வயதில் கோம் நகரில் அமைந்துள்ள ஷியா கல்வி நிறுவனத்தில் படிக்கத் தொடங்கினார்.
தனது 20 வது வயதில் ரைசி, தெஹ்ரானுக்கு அருகில் உள்ள கராஜ் நகரின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
ரைசி 1989 மற்றும் 1994 க்கு இடையில் தெஹ்ரானின் வக்கீல் ஜெனரலாக இருந்தார். பின்னர் 2004 முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
2014 ஆம் ஆண்டு இரானின் அரசு வழக்கறிஞர் ஆனார். இரானிய நீதித்துறையின் தலைவராக இருந்த ரைசியின் அரசியல் கருத்துகள் 'அதிக அடிப்படைவாத சிந்தனைகள் நிறைந்ததாக' கருதப்படுகின்றன.
2021 ஜூன் மாதம் தாராளவாத ஹசன் ரூஹானிக்கு பதிலாக இரான் இஸ்லாமிய குடியரசின் அதிபராக ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 ஜூன் மாதம் இரான் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வான போது உள்நாட்டில் பல சவால்களை எதிர்கொண்டார்.
ஷியா மதத் தலைவர்களின் வரிசையில் ரைசி, மதத் தலைவர் ஆயத்துல்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்தார்.
Post a Comment
Post a Comment