அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றினால், அதாவுல்லாஹ் சக்கியின் வழக்கு தள்ளுபடி






அக்கரைப்பற்று மாநகர முன்னாள் முதல்வரான அதாவுல்லா சக்கி அவர்களினால், அக்கரைப்பற்று மாநகர சிற்றூழியரான றிஸ்வான் ஸனாஸ் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தீங்கியல், அவதூறு தொடர்பான வழக்கானது இன்றைய தினம் அக்கரைப்பற்று மாவட்ட கௌரவ நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அவர்களினால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த வழக்கானது தன்னையும், தனது தந்தையான  அதாவுல்லா அவர்களையும், முகநூலின் ஊடாக, அவமதிக்கும் விதமாக, மிகவும் அவதூறான பொய்யான அல்லது உண்மைக்கு புறம்பான பதிவுகளை பதிவு செய்தற்கு எதிராக  வழக்காளியின் சார்பில் சட்டத்தரணி சஸ்னா என்பவரால் தாக்கல், செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் எதிராளியோ அவரது சட்டத்தரணிகளோ, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைளின் போது, தோன்றியிருக்கவில்லை என்பதால் இந்த வழக்கானது ஒருமுக விளக்கத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த தீங்கியல் வழக்கானது, குறித்த வழக்கு ஒருமுக விளக்கத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது. வழக்காளி தரப்பில் சாட்சியம் அளிக்கின்ற போது குறித்த எதிராளியினால் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அல்லது, தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை அல்லது அவதூறானவை என்பது பற்றி நிகழ்தகவுச் சமநிலையின் அடிப்படையில் நிரூபிக்க தவறி இருந்தமையினால், குறித்த வழக்கினை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பினை  வழங்கியது.

குறித்த வழக்கில், இத்தகைய தீர்ப்புக்கு மாவட்ட நீதிமன்றம் வருவதற்கான வழக்குச் சட்டங்களையும் தீர்ப்பு சட்டங்களையும் இன்றைய தினம் திறந்த நீதிமன்றத்தில் விளக்கி  வழக்காளிக்க்கு வாசித்து இந்த தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது.