ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் 'உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை' என்று துணைப் பிரதமர் துமாஸ் தாரபா தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய துமாஸ் தாரபா ஃபிகோவின் அறுவை சிகிச்சை 'நன்றாக' முடிந்திருப்பதாகவும், 'இறுதியில் அவர் உயிர் பிழைப்பார் என்று தான் நம்புவதாகவும்,' தெரிவித்தார்.
முன்னர், தாக்குதலில் படுகாயமடைந்த ஃபிகோ 'உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக' ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை (மே 15) மாலை ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக், பிரதமர் ஃபிகோ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையில் இருந்ததாகவும், அவரது நிலைமை 'மோசமாக' இருப்பதாகவும் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை 'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கூறியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்.
என்ன நடந்தது?
உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180கி.மீ. தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது".
ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள், ஒரு நபர் துப்பாக்கியை உயர்த்தி, பிரதமர் ஃபிகோவை நோக்கி ஐந்து முறை சுடுவதைக் காட்டின. அதன்பின் பிரதமர் ஃபிகோவின் மெய்க்காப்பாளர்கள் அந்த நபரை அடக்கினர். ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.
அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், 'துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் ஃபிகோ ஹெலிகாப்டர் மூலம் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஹண்ட்லோவாவின் கிழக்கே உள்ள பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்," என்றார்.
பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், அப்போது, பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.
முன்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தச் செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்,”
யார் இந்த ராபர்ட் ஃபிகோ?
கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.
இடதுசாரி ஸ்மெர்-எஸ்.எஸ்.டி கட்சிக்குத் தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
2018-இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்,” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார்.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன
Post a Comment
Post a Comment