தனித்துவமிக்க குரல் வளமுடைய பாடகரான உமா ரமணன் 69 வயதில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் சில மறக்க முடியாத பாடல்களைப் பாடியிருக்கிறார்.
உமாரமணன் பாடிய முக்கியமான 10 தமிழ்ப்பாடல்கள் இதோ.
1. பூங்கதவே தாழ் திறவாய்: பாரதிராஜா இயக்கத்தில் 1981ல் வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் உமா ரமணன் பாடிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடியிருப்பார் உமா ரமணன். 1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், இந்தப் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது.
இந்தப் பாடல் வெளியாகி 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் பரவலாக ஒலிக்கப்படுகிறது. பாடலின் இரண்டாவது பகுதியில், "திருத்தேகம் எனதாகும்" என தீபன் சக்கரவர்த்தி பாட ஆரம்பிக்க, உமா ரமணன் 'ம்ம்..' என ஹம்மிங் செய்வார். அது இந்தப் பாடலில் அதிகம் ரசிக்கப்பட்ட இடமாகும்.
2. ஆனந்த ராகம் கேட்கும் காலம்: 1981ல் பாரதி வாசு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
பாடலின் துவக்கத்தில், வயலின், கீபோர்ட், கிடார் ஆகியவை இணைந்து ஒலிக்கும். அதன் பிறகு "ஆனந்த ராகம்" என உயரும் உமா ரமணனின் குரல் கவனிக்கப்பட்டது. இளம்பருவத்துக் காதலின் உணர்வைச் சொல்வதாக ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள், சற்றேனும் கடந்த காலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவார்கள் எனலாம்.
3. பூபாளம் இசைக்கும்: இளையராஜா இசையில் வெளியான தூறல் நின்னு போச்சு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாக்யராஜும் சுலக்ஷணாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கம். இந்தப் பாடலில் முதல் சரணம் முடியும்போது 'தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... னன னன னன னன னா னன னன னன னன னா' என்று உமா ரமணன் பாடும் இடம் அதிக ரசனைக்குரியது.
4. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு: 1983ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பானுப்ரியாவுக்கு இது முதல் படம். இந்தப் பாடலின் துவக்கத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளைப் பாடிவிட்டு, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு" என உமா ரமணன் துவங்கும்போது, அதிகாலையின் புத்துணர்வைத் தரும். இந்தப் படம் பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
5. செவ்வரளி தோட்டத்துல உன்னை நினைச்சேன்: 1983ல் ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பகவதிபுரம் ரயில்வே கேட்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை, கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு' என்ற பாடலும் மிகச் சிறப்பாக இருந்தாலும், இந்தப் பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடியிருப்பார். 80களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது.
6. கண்மணி நீ வரக் காத்திருந்தேன்: ஸ்ரீதர் இயக்கி 1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மோகனும் ஜெயஸ்ரீயும் பாடுவதாக வரும் இந்தப் பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். 'அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகேஏஏ' என உமா ரமணனின் குரல் உயரும் இடம் முக்கியமானது.
7. யார் தூரிகை தந்த ஓவியம்: இந்தப் பாடலை பார்த்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், 80களில் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 'பாரு பாரு பட்டணம் பாரு' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். இளையராஜாவின் இசை, உமா ரமணனின் குரல், கங்கை அமரனின் வரிகள் இணைந்து இந்தப் பாடலை கவனிக்க வைத்தன.
8. நீ பாதி நான் பாதி கண்ணே: வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி படத்தில் கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடிய பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல், சோகத்திற்கான சக்ரவாக ராகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜேசுதாஸ் - உமா ரமணனின் குரல்கள், கேட்பவர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. இடையிடையே வரும் கிடார் இசை ஒரு போனஸ்.
9. ஆகாய வெண்ணிலாவே, தரை மீது வந்ததேனோ: 1990ல் ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலை, கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடியிருந்தார்கள்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் பாடல்களின் தொனியில் உருவாக்கப்பட்ட இசையில், நவீன இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடலைக் கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா. பாடலை "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று ஜேசுதாஸ் ஆரம்பித்தவுடன், "அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ" என்று உமா ரமணன் பின்தொடரும்போதே முழு பாடலையும் கேட்ட திருப்தி ஏற்பட்டுவிடும்.
"தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம். பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம். வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம். கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்" என்று செல்லும் பாடல் வரிகளை எழுதியவர் வாலி.
10. நில் நில் நில்.. பதில் சொல் சொல்: பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் 1995ல் வெளியான 'பாட்டுப் பாடவா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இந்தப் பாடலையும் உமா ரமணனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்தப் பாடலின் வரிகளே இதற்கு ஒரு தனித்துவத்தைத் தந்தன என்றாலும், உமா ரமணனின் குரல் கூடுதல் இனிமையைச் சேர்த்தது.
Post a Comment
Post a Comment