நைறுாஸ்கான் நியமனம்




 


( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த நைறுாஸ்கான் ஹிதாயத்துல்லாஹ் சம்மாந்துறை கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவருக்கான நியமனக் கடிதத்தை நேற்று வழங்கி வைத்தார்.

ஏலவே இப் பதவியில் இருந்த திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் மட்டக்களப்பு வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

மருதமுனை சைக்கிளிங் கிறீன் கழகத்தின் ஸ்தாபக அங்கத்தவரும், நீண்ட துார வேக சைக்கிளோட்ட வீரருமான  நைரூஸ்கான்,
பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு அல்மினன் வித்தியாலயம், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லுாரி (தேசிய பாடசாலை), அட்டாளைச்சேனை கல்வியல் கல்லுாரி போன்றவற்றின் பழைய மாணவராவார்.

 இவர் 1997ம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சம்பியனான சம்ஸ் மத்திய கல்லுாரி பாடசாலை உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்ததுடன், 1998 ல் பாடசாலை மாணவராக இருக்கும் போது, அகில இலங்கை சுதந்திர பொன்விழா கட்டுரைப்போட்டி சிரேஸ்ட பிரிவில் முதலிடம் பெற்றதற்காக அப்போதைய ஜனாபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரத்துங்கவிடமிருந்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இளம் கலைமானியையும், திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் பின் கற்கை கல்வியியல் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர், திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுமாணி பட்டப் பின் படிப்பையும் மேற்கொண்டு வருகின்றார்.

2016ம் ஆண்டு தமிழ் மொழி மூல இலங்கை அதிபர்கள் சேவைப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்று, பெரியநீலாவணை புலவர்மணி மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணி புரிந்து, 2017ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டு, திருக்கோவில் கல்வி வலயத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாக உதவிக் கல்விப் பணிப்பாளராக பணி புரிந்து 2022ம் ஆண்டு, சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு மாற்றலாகினார்.