கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வு காணப்படும் என ஜனாதிபதியால் சாதகமான பதில்





வி.சுகிர்தகுமார் 0777113659  


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மனித உரிமை செயற்பாட்டாளரும் மாணவர் மீட்பு பேரவை தலைவருமான செ.கணேசாநந்தம் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் க.சிவலிங்கம் தமிழரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச கிளை தலைவர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்ட குழுவினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (14) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனால் கையளிக்கப்பட்டது.
மகஜரில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அப்பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமனம் புதிய கணக்கு ஆரம்பித்தல் காணி விடயங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தெளிவு படுத்தப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமிக்கப்பட்டு கணக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு தீர்வினை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கான தீர்வு காணப்படும் என ஜனாதிபதியால் சாதகமான பதில் வழங்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கூறினார்.
இதேநேரம் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி உறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சினைகளான பொத்துவில் வடக்கையும் சம்மாந்துறை மேற்கையும் மையப்படுத்தி இரு புதிய பிரதேச சபையினை உருவாக்கல் கல்முனை வடக்கு பிரதேச செயலக மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் சம்மாந்துறை பிரதேச செயலகம் காரைதீவு பிரதேச செயலகம் ஆகியவற்றில் உள்ள தமிழ் பாடசாலைகளை ஒன்றிணைந்து புதிய கல்வி வலயத்தை உருவாக்கல் சம்மந்தமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் உள்ள கல்வி சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலான வளப்பங்கீட்டில் பாகுபாடு நிலவுவதாகவும் குறிப்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையாக பெயரளவில் தரமுயர்த்தப்பட்டாலும் அதற்குரிய வளங்கள் முறையாக இதுவரை வழங்கப்படவில்லை எனவும் 25 இற்கு மேற்பட்ட வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய இடத்தில் 5 வைத்தியர்கள் கடமையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே முழு அளவிலான வளப்பங்கீடு உடன் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் போன்ற பிரதேசங்களின் கரையோரப்பகுதிகளில் இல்மனைட் அகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் குறி;த்த பகுதிகளில் வாழும் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலைவரும் என்பது தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இச்செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் திருக்கோவில் பெரியமுகத்துவாரத்தின் ஊடாக முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் களப்பு நீரினை சேமித்து பொருத்தமான குளங்களுக்கு அனுப்பி வைக்கவும் முகத்துவாரத்தின் ஊடாக நீர் செல்லும் இடத்தில் நிலையான அணைகளை (ஸ்பீல்களை) அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.