குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு உள்வாங்கப்படாதோரின் கோரிக்கை!




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 துணை மருத்துவ சேவை குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்ட 317 பேர் தங்களையும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகஜர்களை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 2021.01.01 ஆம் திகதிய 2,209 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி குடும்பநல உத்தியோகத்தர் பதவி ஆட்சேர்ப்பிற்கு தகைமைகளைப் பெற்று உரிய நேர்முகப் பரீட்சைக்கு பலர் தோற்றியிருந்தனர்.
இவர்களுள் 2836 பேர் தகுதியுடையவர்கள் என கருதி கடந்த 2021.12.22ம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் 2022.02.09 ஆம் திகதி வெட்டுப்புள்ளி; மதிப்பெண் அடிப்படையில் தகுதியுடையவர் பெயர் பட்டியலை இரு குழுவாக இரு கட்டங்களில் பயிற்சியில் இணைத்துக்கொள்வதாக சுகாதார அமைச்சின்வலையமைப்பில் பதிவேற்றம் செய்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த 2022.09.05 ஆம் திகதியில் முதல் குழுவிலிருந்து வெட்டுப்புள்ளி; மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் பயிலுனர்களை தெரிவு செய்து உரிய பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட்டதோடு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மிகுதி பயிலுனர்களை இரண்டாவது குழுவாக உரிய பயிற்சிக்கு உள்வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கடந்த மூன்று வருடங்களாக 1317 பயிலுனர்கள் பயிற்சிக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது கடந்த 08ஆம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சி நெறி இரண்டாம் பகுதி தெரிவுப்பட்டியலில் 1000 பயிலுனர்களை மாத்திரமே தெரிவு செய்துள்ளனர்.
இவரை காலமும் இப் பயிற்சி நெறிக்கான விதிமுறைகளை தவறாது பேணியும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டும் காத்திருந்த மிகுதி 317 பயிலுனர்கள் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதது எமக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 1000 பயிலுனர்களில் தொழில் நிபந்தனைகளையும் மீறி திருமணமானோர் ஏனைய அரச தொழிலில் உள்ளோரும் உள்ளடங்குகின்றனர்.
ஆகவே சரியான முறையில் இரண்டாம் பகுதி பயிற்சி நெறி தெரிவு இடம்பெறாமல் பெயர்பட்டியலில் 1000 பயிலுனர்களை மாத்திரம் கொண்டு வலையமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது தெரிவு செய்யப்படாத 317 பயிலுனர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே இத் தொழிலுக்காக கடந்த 2021 தொடக்கம் இன்றுவரை காத்திருக்கும் எங்களையும் எங்கள் மனநிலையையும் கருத்திற் கொண்டு; இரண்டாம் பகுதி பயிற்சி நெறி ஆரம்பமாகும் காலத்திலேயே உள்வாங்குவதற்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தங்களுக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்