ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு நிதி உதவி





மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : அபிவிருத்தி பணிகளுக்காக நிதியும் ஒதுக்கினார் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்தியத்தில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற மருதமுனை கமு/கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயம் செய்து பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்கள், பௌதீக மற்றும் ஆளணி விடயங்கள், கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

கல்லூரி முதல்வர் எம்.எம். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் மைதான தேவைகள், சிற்றுண்டிச்சாலை புனர்நிர்மாணம் உட்பட பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தனர்.

இதன்போது மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மேம்பாட்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பஹானிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது கமு/கமு/ அல்- ஹம்ரா வித்தியாலயம், கிரீன் மக்ஸ் விளையாட்டுக்கழகம், பிரைட் பியூச்சர் விளையாட்டுக்கழகம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு கடிதமும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். உமர் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.