அம்பாறையில் இல்மனைற் அகழ்வு உடனடியாக நிறுத்தம்!! கல்முனை விவகாரத்தில் திடீர் திருப்பம் !!




 


( வி.ரி.சகாதேவராஜா)


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குழுவினர் மேற்கொண்ட சந்திப்பின் எதிரொலியாக பல மாற்றங்கள் நிகழவுள்ளன.

அம்பாறை தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இல்மனைற் அகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள் . சுமார் ஒரு மணி நேரம் இச் சந்திப்பு இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் மன்னர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்,
சமூக செயற்பாட்டாளரும் மாணவர் மீட்பு பேரவை தலைவருமான செல்வராஜா கணேசானந்தம், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச தலைவர் கே.ஜெகநாதன்( குமார்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஜனாதிபதி தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது . விரிவான மகஜரும் சமர்ப்பிக்கப்பட்டது.


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமித்தல்  மற்றும் புதிய கணக்கு ஆரம்பித்தல் தொடர்பாக ஆரம்பத்தில் விரிவாக பேசப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கையை கோடீஸ்வரன் முன்வைத்தார்.

அப்படி அதனை செய்யும் பட்சத்தில் தங்களுக்கான ஆதரவை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முழுமையாக வழங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.

 ஜனாதிபதி அதனை பரிசீலீப்பதாகவும் நாளை பிரதம மந்திரியுடன் கலந்துரையாடிவிட்டு இதனை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதாக குழுவினரால் சுட்டிக் காட்டப்பட்டது.

 இதனால் கடல் தொழில் புரிகின்ற ஏனைய விவசாயத்துடன் தொடர்புபட்ட தமிழ் மக்கள் சுமார் 15000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

 அது மட்டுமல்ல கடல் வளம் முருகைக் கற்கள் மீன்பிடி போன்றன பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதனை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த இடத்தில் தொலைபேசி தொடர்பு கொண்டு பணிப்புரை விடுத்தார்.

மேலும் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
குறிப்பாக பொத்துவில் வடக்கை மையமாக வைத்து ஒரு பிரதேச சபையும் சம்மாந்துறை மேற்கு தமிழ் பிரதேசங்களை மையமாக வைத்து மல்வத்தை  பிரதேச சபையும் ஏற்படுந்தப்படுவதன் அவசியத்தை இடித்துரைத்தார்.

மேலும் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை உள்ளடக்கியதாக ஒரு புதிய வலயம் உருவாக்கு தொடர்பாகவும் அங்கே பேசப்பட்டது.

அடுத்து தமிழர் பிரதேசங்கள் பொதுவான  நிதிப்பங்கீட்டில் பாரிய புறக்கணிப்பை எதிர் நோக்கி வருகின்றது.  தமிழர் பிரதேசங்களில் இணைப்பு குழு தலைவர்களாக பிறர் இருப்பதால் இந்த புறக்கணிப்பு பாரபட்ச இடம் பெறுவது சுட்டிக்காட்டப்பட்டது.

 மேலும் திருக்கோவில் ஆதரவைத்தியசாலை பெயரளவில் நான்கு ஐந்து வைத்தியர்களுடன் உடன் இயங்குவதாகவும் அங்கு உண்மையில் 25க்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஆளணி தேவைப்படுவதாகவும் ஏனைய வைத்திய உபகரணங்கள் அங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச பெரிய களப்பில் கடல் நீர் கலப்பதால் ஏற்படும்  பாதிப்பு பற்றி கூறப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக இங்கு சமர்ப்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை படிப்படியாக செய்வதாக ஜனாதிபதி உறுதி அளித்தார்.