தனது சேவைக்காலத்தில் நேர்மையாக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் ஜின்னா ஓய்வுபெற்றார்
யுத்த காலம் தொடக்கம் இன்றுவரை சுமார் 34 வருடங்கள் தாய்நாட்டுக்காக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏறாவூரை சேர்ந்த சார்ஜன் ஜின்னா அவர்கள், ஒரு நேர்மையான நெஞ்சுறுதி கொண்ட உத்தியோகத்தர் மாத்திரமல்ல, தனது 34 வருட சேவைக்காலத்தில் ஒரு தடவையேனும் பொது மக்களினாலோ, அதிகாரிகளினாலோ குற்றம் காணப்படாத, சேவையிலிருந்து இடை நிறுத்தப்படாத பொலிஸ் உத்தியோகத்தராக ஓய்வு பெற்றிருக்கிறார் என்பதே சிறப்பு.
ஆதம்பாவா முகம்மது சரீப், சம்சுலெவ்வை செய்தூன் உம்மா தம்பதிகளின் புதல்வரான இவர், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கல்வி கற்று, தாய்நாட்டுக்காக சேவையாற்ற 1989 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாட்டில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் தன்னை இச் சேவைக்குள் உள்வாங்கிக் கொண்ட சார்ஜன் ஜின்னா, பயிற்சி முடிந்து வெள்ளாவெளி பொலிஸ் நிலையத்தில் முதன்முதலாக கடமை நிமிர்த்தம் கால் பதிக்கிறார்.
விடுதலைப் புலிகள் கிழக்கில் பல பொலிஸ் நிலையங்களையும் கைப்பற்றி பொலிசாரை கைது செய்த சம்பவத்தில், சார்ஜன் ஜின்னா கடமையாற்றிய வெள்ளாவெளி பொலிஸ் நிலையமும் அதில் உள்ளடங்கியதால் இவரும் நிலையத்திலிருந்த ஏனைய பொலிசாரும் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு உழவு இயந்திரமொன்றில் கொண்டு சென்று 8 நாட்களின் பின்னர் தமிழ் பேசும் பொலிசாரை மாத்திரம் விடுதலைப்புலிகள் விடுவித்ததால் அதில் சார்ஜன் ஜின்னாவும் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.
அதன் பின்னர் ஊர் திரும்பியிருந்த இவரையும் ஏனைய முஸ்லீம் பொலிசாரையும் உள்ளூர் விடுதலைப்புலிகள் தினமும் வீடுகளுக்கு வந்து தேடத் தொடங்கியதால் பொதுமக்களோடு பொதுமக்களாக ஊரிலிருந்து வெளியேறி கொழும்பு சென்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துவிட்டு ராஜகிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் மாத்தளை ,மகாஓயா நிலையங்களில் கடமையாற்றிய இவர் 1993 யில் திருகோணமலை மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்று இறுதியாக மூதூரில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தனது சொந்த ஊரான ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்திருக்கிறார்.
ஏறாவூரில் சுமார் ஆறு வருடங்களாக சிறப்பாக கடமையாற்றிய இவரை மூன்று மாதகாலம் மாத்திரம் வெள்ளாவெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஏறாவூர் நிலையத்தில் கடமையேற்ற இவர் நீண்ட கால சேவை அடிப்படையில் 2017 -05-22 அன்றிலிருந்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.
இவரது திறமையை கருத்தில் கொண்ட நிலைய பொறுப்பதிகாரி "சுற்றுச்சூழல் சமூக நல பிரிவினை" பொறுப்பேற்று நடாத்த அனுமதியளித்ததால் காத்தான்குடியில் மிகவும் சிறப்பாக, பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வண்ணம் ஓய்வு பெறும் வரை தனது கடமையை சார்ஜன் ஜின்னா அவர்கள் செய்து வந்ததால், 157 ஆவது பொலிஸ் தினத்தன்று புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலினால் "இவரது அர்ப்பணிப்பான சேவையினை அங்கீகரித்து" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் ஓய்வு பெற்றுச்செல்வதை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வின் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஐம்பதாயிரம் ரூபா பணமும், விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
தமிழ், சிங்கள மொழிகளில் சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்ட சார்ஜன் ஜின்னா, தனது 34 வருட சேவைக்காலத்தில் தான் ஒருபோதும் தேவையற்ற விடுமுறைகளை பெறவில்லை என்பதைவிட நான் யாரிடமும் இலஞ்சம் பெற்று தனது கடமைகளை செய்யவில்லையென்றும் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு உயர் நீதிமன்றில் கடமை நிமிர்த்தம் சென்றிருந்த இவரை, மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் மன்றில் வைத்து தகாத வார்த்தைப் பிரயோகத்தினால் பேசியதால், நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரான என்னை இவ்வாறு சட்டத்தரணி பேசியது கவலையை ஏற்படுத்தியதால், குறித்த சட்டத்தரணிக்கு எதிராக முறைப்பாட்டினை பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கும் விடயத்தை தெளிவுபடுத்தியதன் மூலம் அச்சட்டத்தரணிக்கு குறித்த காலத்தில் கிடைக்கவிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பதவி உயர்வை தடுத்து நிறுத்தியது என்றால், அது எனது நேர்மைக்கும் நெஞ்சுறுதிக்கும் இறைவன் எனக்களித்த பரிசு என்றே நினைக்கிறேன் என்றார்.
தாய் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து சிறப்பான சேவையினை முன்னெடுத்த சார்ஜன் ஜின்னாவின் ஓய்வு கால வாழ்வு மகிழ்வாக அமைய வாழ்த்துகிறேன்.
(ஏறாவூர் நஸீர் -ISD)
Post a Comment
Post a Comment