முசாரப் எம்பியின் கவனத்திற்கு




 


-பொத்துவில் நிருபர் - மஹீஸா மனால்-



எமது பிள்ளைகள் நேரத்திற்கு பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து பஸ் சேவையை நடைமுறைப்படுத்தித் தருமாறு பொத்துவில் சர்வோதயபுரம் ஆத்திமுனை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமுனை மக்களின் சொல்லொன்னா துயரங்களில் போக்குவரத்தும் பெரும் துயராக உள்ளது.


பொத்துவில் பிரதேசத்தின் பின்தங்கிய கிராமமான ஆத்திமுனை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களைச்சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த மக்களின் அன்றாட தேவைகளை  நிவர்த்தி செய்வதற்காக தினந்தோறும் சுமார் 7 தொடக்கம் 10 கிலோமீட்டர் தூரம் வரை பொத்துவிலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இவர்கள் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.


பொத்துவில் சந்தை, பிரதான பஸ்நிலையம், உயர்தர பாடசாலைகள், அரச வைத்தியசாலை, தனியார் வைத்தியசாலை, மருந்தகம் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்வதாயின் இக் கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி அல்லலுற்று வருகின்றனர்.


பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு குறைந்த வருமானங்களை பெற்று வரும் இப் பின்தங்கிய கிராமத்தில் வாழும் இம் மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயமாக நாள் தோறும்  மீன் பிடி மற்றும் விவசாயம் போன்ற கூலித் தொழிலையே செய்து வருகின்றனர்.


இவர்களின் போக்குவரத்து தேவைகளை மேற்கொள்வதில் போக்குவரத்திற்கான எந்தவொரு பஸ் சேவைகளும் இல்லாமல் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை செல்வதில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இவர்கள்  யானைத் தொல்லையிலிருந்து காட்டுப் பிரதேசங்களையும் கரடுமுறடான பாதையினையும் கடந்து  சுமார் 3 தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றே பிரதான வீதியை அடைந்து முச்சக்கரவண்டியில் பொத்துவிலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே பாடசாலை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதே போல் இக்கிராமத்தில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையானதும் மற்றும் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான பாடசாலையும் என இரு பாடசாலைகள் உள்ளன இப்பாடசாலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசரியர்கள் பலர் வெளிப் பிரதேசங்களில் இருந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் வருகை தருகின்றனர்.


இவ்வாறு அத்தியவசிய தேவைகளுக்காக போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ள பொத்துவில் ஆத்திமுனை கிராம மக்கள் தமக்கான போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு குறைந்தபட்சமாக காலை வேலையில் பாடசாலை செல்லும் நேரத்திற்கும் பாடைசாலை கலைந்து மாணவர்கள் வீடு செல்லும் நேரத்திற்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொத்துவில் பஸ் டிப்போ மூலம் ஒரு பஸ் சேவையை செய்து தருமாறு இக் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்த பஸ் சேவையை பாடசாலை செல்லும் மாணவர்களின் நேரத்தை கருத்திற்கொண்டு காலையில் ஹிஜ்ரத் நகரில் இருந்து தொடரப்பட்டு மற்றும் ஆத்திமுனை, மயிலக்காஸ்தோட்டம், சவாளை, பசரிச்சேனை, சின்ன உல்லை பிரதேசங்களினூடாக பொத்துவில் பிரதான பஸ்நிலையம் ஊடாக அல் இர்பான் மகளீர் கல்லூரி ஊடாகச் சென்று மத்திய கல்லூரி வரை செல்வதுடன் அந்த பஸ் அக்கறைப்பற்றுக்கு செல்லும் ஓர் நேர அறிக்கையை வழங்கி பின்னர் அதே ரூட்டில் அந்த பஸ் மீண்டும் பாடசாலை கலைந்து மாணவர்கள் செல்லும் நேர அறிக்கையை கவனத்திற்கொண்டு நடைமுறைப்பட்டு வருமாயின் இப் பிரதேசத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள், வெளிப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் நன்மை அடைவதுடன் போக்குவரத்து சபைக்கு இதனால் எதிர்பார்க்க கூடிய வருமானமும் கிடைக்கும் எனவும் இக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எனவே உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்திற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.