"கட்சிக்குள் இருந்து கட்சியை அழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி'





(எஸ்.அஷ்ரப்கான்)

கட்சி கட்டமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின் கட்சிக்குள் இருந்து கட்சியை அழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை - 15 (தைக்கா நகரில்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு கூட்டம் தைக்கா நகர் வட்டார வேட்பாளர் அதிபர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாத்  தலைமையில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய எம்.எஸ்.உதுமாலப்பை தொடர்ந்தும் தனதுரையில்,

கட்சி விசுவாசம் என்பது மிக முக்கியமான விடயமாகும். நாம் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும்.  

அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கு காலம் எடுக்கின்றது. நாம் விசுவாசமாக செயற்பட்டு நமது கட்சியை வளர்த்து பலப்படுத்தும் நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்காமல், நமது கட்சியை சேர்ந்த நீண்ட கால அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சி பிரமுகர்களை மாற்றுக் கட்சி வேட்பாளர்களாக சேர்த்து தேர்தலில் போட்டியிட வைத்துள்ள விடயம் நம் கண் முன்னே நடைபெற்றுள்ளது.

இது குறித்து கட்சிக்காரர் என்ற ரீதியில் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 80 வீதமான ஆதரவு வழங்கிய சில பிரதேசங்களில் இன்று 60 வீதமான ஆதரவு வழங்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  இந் நிலைமையை ஏற்படுத்தியவர்கள் எமது கட்சிக்குள் இன்றும்  இருந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். 

கட்சியின் கிராம மட்ட கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக மாற்றும் போது இவ்வாறான செயற்பாடுகளை கிராம மட்டத்தில் இயங்கும் கட்சி கட்டமைப்பும், கட்சி போராளிகளும் இணங்காண்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. 

எனவே, கட்சியின் கிராம மட்ட செயற்பாடுகளில் கட்சி முக்கியஸ்தர்கள் உயிரோட்டமாக செயற்பட வேண்டும். கட்சி கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக அமைக்கப்பட்ட பின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கட்சியின் தேசியத் தலைவரால் மத்திய குழுக்கள்  புனரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்  படவுள்ளது. நாம் எல்லோரும் கட்சியின் செயற்பாடுகளில்  "மசூரா" அடிப்படையில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க வேண்டும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கட்சியின் செயற்பாடுகள் சிறந்ததாக அமையும் என்றார்.