ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - அமெரிக்கா, சௌதி அரேபியா கூறியது என்ன?





 கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஃபா வான்வழித் தாக்குதலில் ஏராளமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துவருகிறது. ஆனாலும் போரை தொடரப் போவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் தீவிர தீக்காயங்கள், எலும்பு முறிவு, குண்டடி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, இத்தாக்குதல் “மோசமான துயர நிகழ்வு” என தெரிவித்தார். “அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை” என்றார்.


மக்களை பாதுகாக்க “சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்” மேற்கொள்வது அவசியம் என்று கூறிய அவர், இந்த மோதலில் “தொடர்பில்லாதவர்களுக்கு ஆபத்து நேராமல் தவிர்ப்பதற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது” என்று தெரிவித்தார்.


அக்டோபர் 7 அன்று நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேல் பிரதமர் உரையின் போது குறுக்கீடு செய்தனர். அவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதில் தோல்வியடைந்து விட்டதாக, பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.


“ரஃபாவில் போருடன் தொடர்பில்லாத சுமார் 10 லட்சம் பேரை நாங்கள் வெளியேற்றியுள்ளோம். போரில் ஈடுபடாதவர்களுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் துரதிருஷ்டவசமாக மோசமான தவறு ஏற்பட்டுவிடுகிறது” என நெதன்யாகு அழுத்தமாக தெரிவித்தார்.


“இந்த (தாக்குதல்) சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முடிவுக்கு வருவோம். அதுதான் எங்களின் கொள்கை” என்றார்.


காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

25 மே 2024

'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

24 மே 2024

ரஃபா வான்வழித் தாக்குதலால் உலகளவில் எழுந்த கண்டனக் குரல் - 'போரைத் தொடருவோம்' என நெதன்யாகு உறுதிபட மூலாதாரம்,EPA

சர்வதேச சமூகம் கண்டனம்

சர்வதேச அமைப்புகள் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் ரஃபாவில் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என, ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் உயர் ராஜதந்திர அதிகாரி ஜோசெப் போர்ரெல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் “திடுக்கிட செய்வதாக” தெரிவித்துள்ளார்.


ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறுகையில், “ஏராளமான மக்கள் ஏற்கெனவே உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் போர் முறைகளில் எவ்வித வெளிப்படையான மாற்றமும் இல்லை” என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.


50 டிகிரியை தாண்டும் வெப்பம் - மணல் பிரமிடுகளை எழுப்பி பூமிக்கடியில் வாழும் மக்கள்

28 மே 2024

கனடாவில் 16 பேரின் மரணத்திற்கு காரணமான பஞ்சாபி டிரக் ஓட்டுநரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு - நடந்தது என்ன?

27 மே 2024

‘பாதுகாப்பான பகுதிகளில்’ தாக்குதல்

ரஃபா வான்வழித் தாக்குதலால் உலகளவில் எழுந்த கண்டனக் குரல் - 'போரைத் தொடருவோம்' என நெதன்யாகு உறுதிபட மூலாதாரம்,REUTERS

போர் தொடங்கிய பல மாதங்களுக்குப் பிறகு, டெல் அவிவ் மீது ஹமாஸின் முதல் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.


ரஃபாவில் நடத்திய தாக்குதலில் இரண்டு மூத்த ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ஆனால், ரஃபாவின் மத்தியப் பகுதியில் வட-மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தல் அல்-சுல்தான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஐ.நா. முகாமுக்கு அருகே இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் இத்தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாக, பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


தல் அல்-சுல்தானிலிருந்து வெளியான வீடியோ காட்சிகள், அப்பகுதியில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் கரும்புகை வெளியாவதையும் காட்டின.


“குவைத்தி அமைதி முகாம்’1’” என்ற பதாகை வைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தீயில் எரிவதை கோரமான வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.


இத்தாக்குதலைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய 28 பேரின் இறந்த உடல்கள் தங்களுக்குக் கிடைக்கப் பெற்றதாக, மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தீவிரமான குண்டடி காயங்கள், எலும்புமுறிவுகள், மோசமான காயங்கள் மற்றும் தீக்காயங்களுடன் சுமார் 180 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.


இத்தாக்குதல் துல்லியமானது என இஸ்ரேல் கூறுவதை புறக்கணித்துள்ள அச்சங்கம், ரஃபாவில் “‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்டுள்ள, மக்கள் நிறைந்த முகாம்கள் மீதான தாக்குதல்கள், காஸாவில் மக்களின் உயிரை முற்றிலும் அலட்சியமாக கருதுவதை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.


பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - காணொளி


அமெரிக்கா சொன்னது என்ன?

தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் “இதயத்தை நொறுக்குவதாக” தெரிவித்துள்ள அமெரிக்கா, ஆனால் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்க உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளது.


“ஹமாஸை பின்தொடர்ந்து சென்நறு தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. இஸ்ரேல் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பொறுப்பான இரு மூத்த ஹமாஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்,” என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


ஆனாலும், “பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும்” எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர்

27 மே 2024

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

27 மே 2024

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கூறுவது என்ன?

இஸ்ரேலிய தாக்குதலை பாலத்தீன குடிமக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் கொடூரமான செயல் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.


அந்த அமைப்பு தனது அறிக்கையில், இந்த தாக்குதலை "போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரச ஆதரவு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.


"இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.


சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ரஃபாவில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக் கொண்டது.


அதனை வரவேற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்றும், இது சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டது என்றும் பாலத்தீன மக்களின் உரிமைகளை வலுப்படுத்துவதாகவும் கூறியிருந்தது.


இருப்பினும், ஐசிசி உத்தரவு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

சௌதி அரேபியா கூறுவது என்ன?

சௌதி அரேபியாவும் நார்வேயும் இணைந்து மே 28ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காஸா மீதான இஸ்ரேலிய நடவடிக்கையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தன.


காஸாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்ததாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காஸாவில் போரை நிறுத்தவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவதாக நார்வே மே 22 அன்று அறிவித்தது. இதற்காக நார்வே மே 28ஆம் தேதியையும் நிர்ணயித்துள்ளது.


நார்வே தவிர, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவையும் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்தன.


முன்னதாக, சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் செய்தியாளர்களிடம் பேசினார்.


"பாலத்தீனம் இல்லாமல் இஸ்ரேலின் இருப்பு சாத்தியமில்லை என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படுவதே நலன் பயக்கும் என்பதை இஸ்ரேலிய தலைமை புரிந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறினார்.


பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அரபு லீக் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது.


இஸ்ரேலுக்கு அழுத்தம்

ரஃபா வான்வழித் தாக்குதலால் உலகளவில் எழுந்த கண்டனக் குரல் - 'போரைத் தொடருவோம்' என நெதன்யாகு உறுதிபட மூலாதாரம்,ANADOLU

ரஃபாவில் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் கடந்த உத்தரவிட்ட நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் கண்களும் தங்கள் மீது இருப்பதை இஸ்ரேல் அறிந்திருக்கும். தங்கள் நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க இஸ்ரேல் மீது பெரும் அழுத்தம் உள்ளது.


இந்த நடவடிக்கை உளவுத்துறை தகவல் அடிப்படையிலானது என்றும் இரு ஹமாஸ் பிரமுகர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ஆனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த சம்பவம் எப்படி திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அட்வகேட் ஜெனரல் மஜ் ஜென் யிஃபாட் டோமெர் நெருஷல்மி உட்பட உயர் ராணுவ அதிகாரிகள், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நடவடிக்கையின் திருப்புமுனையாக இது இருக்குமா என்பது மற்றொரு விஷயம். ரஃபாவில் “முழுமையான வெற்றி” என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த பேரழிவு அவருடைய மனதை மாற்றும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.


இத்தாக்குதல் தொடர்பான அச்சுறுத்த வைக்கும் காட்சிகளுக்கு நடுவே, இஸ்ரேலிய தரைப்படைகள் ரஃபா நகருக்கு அருகில் வரும்போது இன்னும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது.


இஸ்ரேலின் ஏற்கெனவே சிதைந்துபோன பிம்பத்திற்கு இந்த தாக்குதல் இன்னுமொரு அடியை கொடுத்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 அன்று, ஹமாஸ் குழுவைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 252 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, காஸா மீது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.


போர் தொடங்கியதிலிருந்து இப்போது வரை 36,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.