கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவி விலகினார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) மே 15-ஆம் தேதி லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார்.
இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.
லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட
படக்குறிப்பு,சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ் தர்மனிடம் தனது ராஜினாமாவை கையளிக்கும் லீ சியென் லூங்
கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.
லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட
படக்குறிப்பு,புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் லீ சியென் லூங்
அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.
அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது
லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை
சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.
ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.
2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.
ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.
"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.
அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.
சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.
இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES
பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை
தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?
லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.
இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.
"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.
ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.
மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.
அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.
சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'
லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.
சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.
அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.
"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.
அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .
Post a Comment
Post a Comment