”கல்முனை நகரை 4ஆக அல்லது 48 ஆக பிரியுங்கள்! ஆனால் தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி நிலம் கூட விட்டுக்கொடுக்கமுடியாது !!’




 


( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகரத்தை 4ஆக அல்லது 48 ஆக பிரியுங்கள்.
ஆனால் 
கல்முனை நகரத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது.கல்முனை என்பது தமிழர்களின் தாயகம் .

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கவிந்திரன் கோடீஸ்வரன் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

குறித்த ஊடகச் சந்திப்பு அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்றது. அச்சமயம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் க.சிவலிங்கம், தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச தலைவர் கே.ஜெகநாதன்( குமார்) ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கு கோடீஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்... நேற்று சமூக வலைத்தளங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்களின் கருத்தினை அவதானித்தேன்.

 அவரது கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக 56வது நாளாக மழையிலும் வெயிலிலும் கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றது .அந்த எதிர்வினையான கருத்துக்கு பதிலடி கொடுக்க எனக்கு கடமை இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தின் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாக கூறுகின்றார் .இது அப்பட்டமான பொய். உணர்வுள்ள அனைத்து மக்களும் இணைந்து  நிர்வாக அதிகார பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தை நடத்துகின்றனர் . 1993 இல் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான பூரண அதிகாரங்களை அவர்கள் கேட்கிறார்கள்.
56 நாட்களாக இந்தப் போராட்டம் நடக்கிறது. அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர் அரசாங்க அதிபர் ஆவார். அவர் இன்னும் அங்கு வந்து அந்த மக்களின் உணர்வலைகளை கருத்தைப் பெற முயற்சிக்கவில்லை. இது மிகவும் கவலையான விடயம். ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக இந்த விடயத்தை கூறி இருக்கிறோம் .ஓர் அரசாங்க அதிபர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும்.அவர் அரச நிருவாகி. ஓரினத்திற்கு மாத்திரம் கடமை செய்ய அவரை ஜனாதிபதி நியமிக்கவில்லை.

ஒரு இனத்துக்கு பாரபட்சம் காட்டி இன்னொரு இனத்தை அரவணைத்து செல்வது உலகத்தில் எங்கும் நடக்காத விடயம். அது இங்கு நடக்கிறது.
 கல்முனையை நகரை நான்காக பிரிக்க போவதாக ஹரிஷ் கூறுகின்றார் .அது அவரது சொந்த கருத்து.அவர்  நான்காக அல்ல 48 ஆக பிரிக்கட்டும் . எத்தனை பிரிப்பு வந்தாலும் எமது கல்முனை தமிழ் பிரதேசங்களில்உள்ள 29 கிராம சேவை பிரிவுகளிலே எந்த ஒரு இஞ்சி நிலத்தை கூட விட்டுக் கொடுக்க முடியாது .
கல்முனை என்பது தமிழர்களின் தாயகம். 

அவர் கல்முனைக்கு பிதா, தான் என்று கூறுகிறார் .
அவர் கல்முனைக்கு பிதாவாக ஒருபோதும் இருக்க முடியாது.
 தேவையானால் அவர் பிறந்த கல்முனைக் குடிக்கு  பிதாவாக இருக்கட்டும் . அல்லது சாய்ந்தமருதுக்கு மருதமுனைக்கு இருக்கட்டும்.


ஆனால் எங்களுக்கு இருக்க முடியாது. கல்முனை நகரம் தொண்ணூறு வீதம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற தமிழர் தாயகம் .அதை துண்டாடி பிரித்து கையாள்வதற்கான சதித் திட்டமே இதுவாகும்.
 இதே செயல்பாட்டில் முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஈடுபட்டிருந்தார். இப்பொழுது இவர் ஈடுபடுகின்றார் .

இந்த துண்டாடும் கோஷத்தை முன்வைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கின்றார்.

 தமிழ் மக்களின் நியாயமானதும் உரிமைகளை குழப்ப முனைகிறார்.ஒரு போதும் முடியாது.அது பகல் கனவு.

 இந்த பிரிவுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து வளங்களையும் மக்களையும் உள்ளடக்கிய தனியான பூரண அதிகாரம் மிக்க பிரதேச செயலகம் ஒன்றே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றியே தீருவோம் என்று சூளுரைத்தார்.