மாபெரும் கலாசார விளையாட்டு விழா!





( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26 வது மாபெரும்  கலாச்சார விளையாட்டு விழா எதிர்வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெற இருக்கிறது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கும் கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.


சீர்பெறு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான எந்திரி என் .சிவலிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப்பணிப்பாளர் யு. சிவராஜா ஆகியோரும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் மற்றும் ஏனைய சிறப்பு நட்சத்திர  கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

 இந்த நிகழ்விலே விசேடமாக காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய "விபுலவிருட்சம்" என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது. அத்துடன் கல்வித்துறை சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்று கழக செயலாளர் எஸ்.கிரிசாந்த் தெரிவித்தார்.