சூரிய சக்தி மின் இணைப்பு





 நூருல் ஹுதா உமர்


இறக்காமம், குடுவில் அரபா நகர் கிராமத்தில் மின்சார வசதி இல்லாமல் மிக நீண்ட காலமாக பல்வேறு சிரமங்கள் உடன் வாழ்ந்து வந்த சுமார் 35 குடும்பங்களுக்கு தனவந்தர்களால் சூரிய சக்தி மின் இணைப்பு வழங்கப்பட்டது.

35 குடும்பங்களுக்கு மின் இணைப்பினை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.எம்.சன்சீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஷ்ஷான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு மின் இணைப்பினை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், இறக்காமம் பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜஃபர், கிராம உத்தியோகத்தர்களான ஏ.சீ.எம்.சமீர், எம்.ஜே.எம்.அதீக், சமூக சேவையாளர் ஜிப்ரி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரையாற்றுகையில், அடிப்படை வசதிகளின்றி மிகவும் கஷ்டத்துடன் வாழும் இக்கிராம மக்களின் நலன் கருதி தனவந்தர்கள் முன்வந்து மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இங்குள்ள மக்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களின் சுகாதார ரீதியான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு இக்கிராமத்தில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.