தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை





 தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.


இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.


ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.


தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.


ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,AP

மீட்புப் பணிகள் தீவிரம்

ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY

ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர்.


தைபெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தைபெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின


இடிபாடுகளின் காட்சிகள்

தைவானின் தலைநகர் தைபெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.


மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.


தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.


தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.


அமெரிக்க கப்பல் விபத்து: ஒரு வாரமாகியும் இந்திய மாலுமிகள் 20 பேரும் வெளியேற முடியாதது ஏன்?

2 ஏப்ரல் 2024

கச்சத்தீவு: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்த '300 அடி நிலம்' ஏன் முக்கியம்? எளிய விளக்கம்

2 ஏப்ரல் 2024

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

2 ஏப்ரல் 2024

தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

படக்குறிப்பு,

தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ்


தைவான் தமிழர்களின் நிலை என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ், தாம் ஸின்ச்சு என்ற பகுதியில் வசிப்பதாகவும், இன்று (புதன், ஏப்ரல் 3) காலை உள்ளூர் நேரப்படி 07:58 மணியளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார். “நிலநடுக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு அது உணரப்பட்டது,” என்றார்.


தாம் இருக்கும் பகுதி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 200கி.மீ. தொலைவில் இருந்தாலும், அவர்கள் பகுதியிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவித்தார்.


“நாங்கள் வசிக்கும் குடியிருப்புக் கடிடத்தில் அனைத்து வீடுகளிலும் விரிசல் எற்பட்டுள்ளது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை,” என்றார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

தாய்பெயிலிருந்து ஹுவாலியன் செல்லும் சாலைகள் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.


மேலும் பேசிய அவர், தாம் தொடர்புகொண்டவரை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுவாலியனில் குறைந்த அளவே தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் அவர் கூறினார்.


தாய்பெய், தாய்ச்சு, ஸின்ச்சு ஆகிய நகரங்களில் தமிழர்கள் அதிகப்படியாக வசிப்பதாகவும் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.


அதேபோல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தைவானுக்குச் சென்று வசிப்பவர்களுக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் கூறினார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

‘தைவானில் நிலநடுக்கங்கள் மிகவும் சாதாரணமானவை’

மேலும் பேசிய ரமேஷ், தைவானில் நிலநடுக்கங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்பவை என்றார். அங்கு ஆண்டுக்கு சுமார் 300 நிலநடுக்கங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை அளவில் 3-க்கும் கீழே தான் இருக்கும் என்றும் கூறினார்.


“வாரம் ஒருமுறையாவது நிலநடுக்கத்தை உணர்வோம். இங்கிருக்கும் கட்டிடங்கள் அதற்குத் தகுந்தாற்போல் நிலநடுக்கத்தைத் தாங்குமாறு கட்டப்படுவதால் அவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படுவதில்லை. அதனால்தான் 7.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டும் பெரும் சேதங்கள் ஏற்படவில்லை,” என்றார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன


அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.


ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.


நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.


பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது.


சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


"இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.


இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது


உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன?

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ்.


ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.


ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.


இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.


நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை.


தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன.


நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன.