நூருல் ஹுதா உமர்
இலங்கை நூலக சங்கத்தின் 18 வது தேசிய ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில், நூலக சங்க ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகருமாகிய கலாநிதி முஹம்மட் மஜீட் மஸ்றூபா தலைமையில் 2024.04.18 ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கை நூலக சங்கம் 1024 அங்கத்தவர்களைக் கொண்ட, நூலகர்களுக்கான தொழில் முறை தராதரங்களைப் பேணுகின்ற, நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் கற்கை நெறிகளை நடாத்துகின்ற ஒரு தொழில்சார் சங்கமாகும். இந்நிறுவனம் தனது வருடாந்த மாநாடுகளை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நடத்தி வருகின்றது. இம்முறை 18 வது தேசிய ஆய்வு மாநாடு 'நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு: சமூக விரிவாக்கல் சேவைகள் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல்'' எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றது.
இவ்வருடம் வித்தியாசமான முறையில் இலங்கையின் தேசிய மொழிகளை முதன்மைப்படுத்தி மும்மொழிகளிலும் சிங்கள மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி மூலம் இவ் ஆய்வு மாநாடு நடத்தப்படுகின்றது. இலங்கை நூலக சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. பிருத்தி லியனகே மற்றும் முன்னாள் தலைவர் கலாநிதி ஆனந்த திஸ்ஸ ஆகியோரின் நெறிப்படுத்தல்களில் இவ் ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்களும், முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் ஆர். மகேஸ்வரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜெ. ஜெயராஜ் அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றினர். கிழக்கு பல்கலைக்கழக பிரதி நூலகர் எஸ். சாந்தரூபன் இணைத் தலைவராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முதன்மை அமர்வின் தலைமையினை கலாநிதி திருமதி கே. சந்திரசேகர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் நூலகர் அவர்கள் ஏற்றிருந்தார். மாநாட்டின் செயலாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ஜெனன் அவர்களும், இணைச் செயலாளராக ஏ.எல்.எம். முஸ்தாக், கல்முனை பொது நூலகர்; அவர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் பொது நூலகர்கள், பாடசாலை நூலகர்கள், விசேட நூலகர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த வகையில் இம் முறை தமிழ்மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறித்த நிகழ்வு இடம்பெற்றது வரலாற்று சிறப்புமிக்க ஓர் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் ஆய்வு மாநாடு இரண்டு கட்ட அமர்வுகளாக இடம்பெறுகின்றது. முதல் அமர்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட, தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 26ம் திகதி கம்பஹா பொது நூலகத்தில் சிங்கள மொழி மூலம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டுக்கு பல்கலைக்கழக நூலகர்கள், பீடாதிபதிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில்சார் நூலக வல்லுனர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் நூலகவியலைக் கற்கின்ற மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment