கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்மீதான நிருவாக அடாவடித்தனத்திற்கு எதிராக நீதி கோரி நடாத்தும் மக்கள் போராட்டம் இன்று (27 ) புதன்கிழமை மூண்றாவது நாளாகவும் கொட்டும் மழையிலும் ஆக்ரோஷமாக தொடர்கிறது.
அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன? என்று அங்கு குழுமியிருந்த மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின் முன்னால் வீதியியருகே அமர்ந்து அமைதியான முறையில் முன்னெடுத்து வருகிறார்கள்.
நேற்று மற்றும் நேற்றுமுன்தினத்தை விட இன்று அதிகளவான பொது மக்கள் அங்கு கூடத்தொடங்கினர்.
பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்..
கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன. என்று சொன்னார்கள்.
பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும் இப் பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் (25.03.2024) அமைதிப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இன்று (27) மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. பெருமளவான பொது மக்கள் பங்குபற்றி வருகின்றனர்.
அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?
ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் முன்னெடுத்து வரும் மக்கள் வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துமீறிய நிருவாக அடக்குமுறைகள் இடம்பெறுவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 07 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம். இந்நிர்வாக அலகானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93.600.034 இலக்க 93.03.17 திகதிய 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சவரை மசோதாக்கள் மற்றும் 93.07.09ம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. அதனடிப்படையில் தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை தனியான ஆளணி பௌதிக வளங்களுடன் சேவையை வழங்கிவருகின்றது.
கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது கலமுனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றதாக அறிகின்றோம்.
கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை (தெற்கு) பிரதேச செயலக பிரிவின் 'உப அலுவலகம்' ஒன்றாக தரமிறக்குவதற்கான தீர்மானமொன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா இதற்கான பதில் 'ஆம்' எனில் அதற்கான அமைச்சரவை பத்திரத்திரத்தின் விபரங்களை வழங்கவும். பதில் 'இல்லை' எனில் எதன் அடிப்படையில் இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? பிரதேச செயலமொன்றை 'உப அலுவலகமாக' தரமிறக்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றுக்கு எதிரான தீர்மானமொன்றை அமைச்சின் செயலாளரினால் அல்லது அரச அதிகாரி ஒருவரினால் மேற்கொள்ள முடியுமா? இற்கான பதில் 'ஆம்' எனில் அதன் சட்ட வலிதுடமை தொடர்பான விளக்கத்தை ஆரதங்களுடன் வழங்கவும்.
ஒரு பிரதேச செயலக பிரிவுக்காக நியமிக்கப்படும் பிரதேச செயலாளர் தான் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவிற்கு அப்பால் தனது அதிகாரங்களை பிரயோகிக்க முடியாது. இருந்தபோதிலும் கல்முனை (தெற்கு) பிரதேச செயலாளர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினுள் எதுவித சட்ட அங்கீகாரமும் இன்றி பிரயோகித்துவருகின்றார். இது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சட்ட விரோத நடவடிக்கை ஒன்றாகும். எதன் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 1993/94 காலப்பகுதியில் தனியான ஆளணி திறைசேரியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் நிணைக்களங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கென பிரத்தியேகமாக ஆளணிகளை உருவாக்கியுள்ளனர். அதனடிப்படையிலேயே அன்றிலிருந்து இன்றுவரை நியமனங்கள் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்வாக உத்தியோகத்தர் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்இ சமூர்த்தி முகாமையாளர்கள்இ கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூக சேவை உத்தியோகத்தா போன்ற பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 300 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் பிரதான பதவிகளான பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆளணி அங்கீகாரம் இல்லாமல் நியமனங்கள் இடம்பெறலாமா?
'பிரதேச செயலாளார்' மற்றும் 'கணக்காளர்' ஆகிய பதவிகள் உள்ளடக்கப்படாமல் பிரதேச செய்கலமொன்றுக்கு ஆளணி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமா? இற்கான பதில் 'ஆம்' எனில் அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவும். பதில் 'இல்லை எனில் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? இலங்கையில் காணப்படும் பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற அனைத்து பிரதேச செலயக பிரிவுகளும் வர்த்தமானிப்படுத்தப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. என ஊடகங்களுக்கு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment