நோன்பிற்கு தேவை உணவா? பயிற்சியா?




 


நோன்பிற்கு தேவை உணவா? பயிற்சியா?


Dr PM Arshath Ahamed MBBS MD PAED


உங்களிடம் ஒரு கார் இருக்கிறது. அது பெற்றோலில் ஓடும். தேங்காய் நெய்யிலும் ஓடும். பெற்றோல் விலை குறைவு. கிடைப்பதும் இலகு. அப்படியென்றால் பெற்றோலில் தான் அந்த கார் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். பெற்றோல் இல்லாத போது , விலை அதிகரிக்கின்ற போது மாத்திரமே, எப்போதாவது ஒரு நாள் அந்தக் கார் தேங்காய் நெய்யில் ஓடும். 


சார் ஆட்சிக்கு வந்து, ஓரிரு வருடங்களுக்கே பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு. போலின். அப்போது தான் உங்கள் கார் தேங்காய் நெய்யில் ஓடுவது ஞாபகம் வருகிறது. சரி தேங்காய் நெய்யை ஊற்றி நமது காரை ஓடலாம், அப்பாடா நமக்கு கவலை இல்லை என்று தேங்காய் நெய்யை வாங்க கடைக்கு போனால் கடைகளில் தேங்காய் நெய் என்று ஒரு சாமானை இல்லை. உருக்கெண்ணெய் இருக்கிறது, நல்லெண்ணெய் இருக்கிறது , தேங்காய் எண்ணெய் இருக்கிறது, பசு நெய் இருக்கிறது ஆனா எங்க தேடியும் தேங்காய் நெய் இல்லை. இனி எப்படி ஜாமீன் வாங்குவது. என்ன இழவுடா இது என்று உங்கள் பாசுனைக்கு கோல் எடுத்த போதுதான் விஷயம் புரியவருகிறது.


பெற்றோலில் ஓடுகின்ற காலத்தில் அடிக்கடி காரை ரிசர்வ் ற்கு கொண்டு வர வேண்டும். ஒரு கிழமைக்கு ஓரிரு தரமாவது இப்படி செய்ய வேண்டும். ஒரு போதும் புள் டாங் அடித்திருக்க கூடாது. அப்படி செய்தால் தான் தேங்காய் நெய் காரிலே தானாக உருவாகும். அதை தான் பின்னர் பெற்றோல் இல்லாத காலங்களில் பாவிக்கலாம். அப்படி உருவாகும் தேங்காய் நெய்யை அடிக்கடி பாவித்தால் கார் இலகுவில் பழுதடையாது. நல்ல பிக் அப் கிடைக்கும். அடிக்கடி பார்ட்ஸ் மாற்ற வேண்டிய தேவையும் வராது. மெயின்டனன்ஸ் செலவும் குறைவு. தேங்காய் நெய்யில் காரை ஓட்ட பழக்கினால், அடிக்கடி பெற்றோல் அடிக்காமலே, நீண்ட தூரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரை ஓட்டி செல்லலாம் என்று ஏகப்பட்ட நன்மைகள் அப்போது தான் தெரிய வருகிறது. அடடா இது தெரியாமல் இவ்வளவு நாளும் புள் டாங் அடித்து காரை ஓட்டி இருக்கிறேனே என்று   இப்போது கைசேதப்பட்டு பிரயோசனம் இல்லை. கார் வாங்கிய போது மெனுவலை வாசித்திருக்க வேண்டும். 


இது தான் நம் நிலை. கடைசியில் கைசேதம். இப்போது அந்த காரை - உங்கள் உடம்புக்கும் (Body), பெற்றோலை -குளுக்கோஸுக்கும்( Glucose) , தேங்காய் நெய்யை -கீட்டோனுக்கும் (Ketone) மாற்றி விட்டால் சரி. நாமும் இவ்வளவு காலமும் இது தெரியாமல் அடிக்கடி பெற்றோல் அடித்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.


குளுகோஸ் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் தேவை. கீட்டோன் உற்பத்திக்கு கொழுப்பு தேவை. கார்போஹைட்ரேட் ‌தேவை என்றால் மாப்பொருள் உணவுகள் உண்ண வேண்டும் . ஆனால் கீட்டோன் தேவை என்றால் எதையும் உண்ண வேண்டியதில்லை. அவ்வளவு கொழுப்பும் ஏற்கனவே தின்று பெருத்த நமது உடம்பிலே இருக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. இது தான் அடிப்படை.


கைத்தொழில் புரட்சி ஏற்படுதற்கு முதல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவமும் பஞ்சம் வரும். பட்டினி வரும். மனிதர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படுவார்கள். அப்போது அவர்கள் தப்பி பிழைத்து உயிர் வாழ காரணமாக அமைந்தது தான் இந்த கீட்டோன்கள். அதே கீட்டோன்கள் நமது உடலிலும் உண்டு ஆனால் பாவிக்கப்படாமலே. அவைகளை பாவிக்க உகந்த காலம் தான் எதிர்வரும் ரமழான்.

 

எதிர் வருகின்ற புனித ரமழான் உங்கள் உடம்பை கீட்டோனில் இயக்கவைக்க வருகின்ற ஒரு பயிற்சி பட்டறை. இவ்வளவு காலமும் பெற்றோலில் ( குளுக்கோஸில்) ஓடிய உடம்பை இனி ஒரு மாத காலம் கீட்டோனில் ஓட வைக்க வருகின்ற ஒரு புனித காலம். கீட்டோனில் ஓடுகின்ற உடம்பு அடிக்கடி பழுதடையாது. தானாகவே புள் சேர்விஸ் பண்ணிக்கொள்ளும். மெயின்டனன்ஸ் பிரீ. இவ்வளவு நன்மைகளும் வந்து சேர நீங்கள் உங்கள் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். 


இந்த கீட்டோன் வேண்டும் என்றால் பசித்திருக்க வேண்டும். புள் டேங் கூடவே கூடாது. எப்போதும் அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சுப்பர் பெட்ரோல் கூடவே கூடாது. சீனி , இனிப்பு பண்டங்கள் , பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி குறைவாக உணவுப் பதார்த்தங்களை உட் கொண்டால் மாத்திரமே, உடம்பில் ஸ்டோரில் உள்ள கீட்டோனின் பலனை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். இதை தான் இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங்( intermittent fasting) என்று சொல்வார்கள்.


இந்த நோன்பு மனித வரலாறு தொடங்கிய காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்து வருகிறது. வடிவங்கள் மாறினாலும் அதன் பயனும் நோக்கமும் ஒன்றாகவே இருந்து வருகிறது. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது என்று அல்குர்ஆனும் இதையே குறிப்பிடுகிறது.


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்பல. ஆனால் அவைகளை அடைத்து கொள்ள நாம் பசித்திருக்க வேண்டும். தாகித்திருக்க வேண்டும். அதுபோல அதன் ஆண்மீக பயன்களும் பற்பல. அதை அடைந்து கொள்வதற்கு நாம் முத்தகீன்களாக மாற வேண்டும். மொத்தமாக இந்த பொருள் தேடல் உலகிலிருந்து ( Consumerism) கொஞ்சம் விடுதலை பெற வேண்டும். 


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால் அதை பெற்றுக் கொள்ள அதற்கு உரிய முறையில் நாம் நோன்பு நோற்க வேண்டும். அப்போது தான் கீட்டோன் கிடைக்கும். இல்லையென்றால் வழமை போல் குளுக்கோஸ் தான். பெற்றோல் போட வேண்டும்.


ஒரு உதாரணத்திற்கு பின்வரும் அட்டவணை போல உங்கள் நோன்பு நாட்கள் அமைந்தால் உங்கள் உடல் கீட்டோனில் இயங்க தொடங்கும். க்ளுகோஸ் தேவை குறைவடையும். தேவையில்லாத கொழுப்பு எரிக்கப்படும். 


சஹர்- கொஞ்சம் சோறு( மூன்று அகப்பை) ஒரு துண்டு இறைச்சி/ மீன்/ ஒரு முட்டையுடன் ) கொஞ்சம் மரக்கறி. கூடவே ஒரு சில ஈச்சம் பழங்கள் அல்லது ஒரு வாழைப்பழம். ஒரு கிளாஸ் பால்/ தயிர் அன்ட் அரை லிட்டர் தண்ணீர். அல்லது ஒரு துண்டு சீஸ்+ மூன்று பிஸ்கட்+ ஒரு கிளாஸ் பால்+ மூன்று ஈச்சம் பழங்கள் + அரை லிட்டர் தண்ணீர் ( எனது ஃபேவரிட் மெனு)


இப்தார்- ஒரு சில ஈச்சம் பழங்கள் தண்ணீர் அரை லீட்டர். ஒரு கோப்பை கஞ்சி. கூடவே கடித்துக் கொள்ள ஒரே ஒரு சமுசா/ ஒரு கட்லட். (அதையும் தவிர்த்தால் நன்று)


மஃரிப் தொழுகைக்கு பின்னர் ஒரு கப் கோப்பி / ஒரு கப் தேனீர் கொஞ்சம் நறுக்கிய பழங்கள். இடையிடையே கொஞ்சம் தண்ணீர்.


தறாவீஹ் தொழுகைக்கு பின்னர் மூன்று இடியாப்பம்/ ஒரு துண்டு பிட்டு/ இரண்டு ரொட்டி+ மரக்ககறி + மீன் / முட்டை கூடவே ஒரு கிளாஸ் பிரஸ் ஜுஸ். ஒருகிளாஸ் தண்ணீர்.


அவ்வளவு தான் ஒரு நாளைய சாப்பாடு. பள்ளிவாசலுக்கு இயலுமானவரை  நடந்து போவது. நடந்து வருவது. கியாமுல் லைலில் நீண்ட நேரம் நின்று வணங்குவது. இது போதுமான எக்ஷஸைர்ஸ்.  


இப்படி சாப்பிட்டு நோன்பு நோற்று பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் உடம்பும் ஒரு மாத காலம் கீட்டோனுக்கு மாறி விடும்.