( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை மது வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (மனித வளம்) கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா நியமிக்கப்பட்டார்.
திரு சண்முகம் தங்கராஜா மதுவரித் திணைக்கள வரலாற்றில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதி ஆணையாளர் என்ற பெருமையை பெறுகிறார்.
அவர் கொழும்பில் தனது உயர் பதவியை நேற்று (21) பொறுப்பேற்றுக் கொண்டார் .
இவர் மதுவரி திணைக்கள கிழக்கு மாகாண உதவி ஆணையாளராக செயற்படும் அதேவேளை, முழு இலங்கைக்கான பிரதி ஆணையாளராக பதில் கடமையையும் ஆற்றுவார்.
சண்முகம் தங்கராஜா பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்ப கல்வியை பெரிய கல்லாற்றிலும், பின்னர் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு இந்து கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை உயர்நிலைக் கல்வியையும் பெற்று மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக இணைந்து கொண்டார் .
32 வருட சேவை காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முதலில் மது வரி பிரதி ஆணையாளராக நியமனம் பெற்ற ஒரே ஒருவர் தங்கராஜா ஆவார்.
சிறந்த விளையாட்டு வீரரான தங்கராஜா கல்முனை ரோட்டரி கழக(PHF) தலைவராக இருந்து, தற்போது மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் நிருவாகசபை உறுப்பினராக சமூக பணியாற்றி வருகிறார்.
முன்னர், அம்பாரை மாவட்டத்தின் கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய சண்முகம் தங்கராஜா கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று 01.01.2023 அன்று தங்கள் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
சண்முகம் தங்கராஜா கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உப தலைவராகவும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதியாகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment
Post a Comment