கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள்,பொருட்களுக்கு தீ வைத்தனர்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
வீட்டில் யாருமற்ற நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று (16) காலை வீட்டை பார்வையிட சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதை உரிமையாளர் அறிந்துள்ளார்.
சம்பவத்தினால் வீட்டின் அலுமாரியில் இருந்த பெறுமதியான ஆடைகள் மற்றும் காணி உறுதி, ஆலயம் ஒன்றின் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆலயம் ஒன்றின் பொருளாளராக இருப்பதுடன் அவரது  மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றார்.
இருப்பினும் அவர் சில நாட்களில் இரவு வேளைகளில் தனது மகளின் வீட்டில் தங்கிவருதும் வழமை. அதுபோன்றே நேற்றிரவும் மகளது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் குறித்த வீட்டின் உரிமையாளர் பொருளாளராக செயற்பட்டுவரும் ஆலயம் ஒன்றின் ஒலிபெருக்கி சாதனங்களும் அன்மையில் திருடப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் தகவல் வழங்கிய நிலையில் பொலிசாரும் வீட்டினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.