( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் நேற்று ஊர் பூராக சரமாரியாக பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் குவிந்தன.
சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமம் அல்-அஷ்றப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவன் எம்.கே. யூசுப் ஸயான் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இப் பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின.
அதனைத் தொடர்ந்து இறக்காமம் பூராக மாணவன் ஸயான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டார். படி வாகனத்தில் வரவேற்கப்பட்டார். கோலாகலமாக இப்பாராட்டு நிகழ்வு ஊர் பூராக நேற்று இடம் பெற்றது.
செல்லுமிடமெல்லாம் சாதனை மாணவன் ஸயானுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பரிசுகளும் வழங்கினார்கள்.
இறக்காமம் பிரதேச செயலகம் பிரதேச சபை கோட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைகள்
அனைத்திலும் இக் கௌரவம் வழங்கப்பட்டது.
இவ்வெற்றி இப்பாடசாலைக்கும் இறக்காமத்திற்கும் கிடைத்த ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
குறித்த சாதனை செல்வன் யூசுப் ஸயான் எஸ்.எல்.எம். குத்தூஸ் ஆசிரியர், எஸ்.எல். பஸ்மியா ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
வலயம் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆசிரிய ஆலோசகர் எஸ்எல்ஏ.முனாவ் ஆகியோர் சமுகளித்திருந்தனர்.
Post a Comment
Post a Comment