மார்ச் 8 மகளிர் தினம்





மார்ச் 8... 

சர்வதேச மகளிர் தினம்! உலகம் முழுவதும் அன்று மிக உற்சாகமாக, மகிழ்ச்சியாக மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. ஒருவகையில் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதன் இன்னொரு கோணத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு முன்னதாக, உலக மகளிர் தினத்தின் உருவாக்கம் பற்றி ஒரு சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம்.


1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும், சுமார் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை, அடுத்த ஆண்டே தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அறிவித்தது. எனினும், 1975-ம் ஆண்டுதான் மார்ச் 8-ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா அறிவித்தது. அதைத் தொடர்ந்தே மெள்ள மெள்ள உலக அளவில் இது பரவ ஆரம்பித்தது.


தோள் சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு; 40 ஆண்டுக்காலம் போராட வைத்த அடக்குமுறை! 


இன்று உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம், ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டங்கள்தான் இன்றைய நம் ஆர்ப்பரிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றன. பெண்களின் உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கா விட்டால் இன்று நம்முடைய குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும்.


வாக்குரிமைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தராவிட்டால் நாம் வாக்களிக்கும் உரிமையற்று வெறும் பதுமைகளாகவே இருந்து கொண்டிருப்போம். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி அவர்கள் போராடி இருக்காவிட்டால் இன்று வெளியிலும் வீட்டிலும் பெண்களின் நேரம் சுரண்டப்பட்டிருக்கும். ஆக, இன்று பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகள் எல்லாம் போராடி பெறப்பட்டவை. வலுவான அடித்தளம் கொண்டவை. பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவை.



இத்தகு உரிமைகளை அடைவதற்குக் காரணமான முன்னோடிப் பெண்களை நாம் போற்ற வேண்டும். இன்று எல்லா துறைகளிலும் நாம் மகிழ்ச்சியுடன் கண்ணுறும் பெண் முன்னேற்றத்துக்குப் பின்னால் பலரின் உழைப்பு, முயற்சி இருக்கிறது. அரசு எடுத்த முன்னெடுப்புகள் உள்ளன. எழுத்தாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் போன்றோர் பேசியும், எழுதியும் வருகின்றனர். பெண் விடுதலை குறித்தும், பெண் கல்வி, பெண் உரிமைகள் குறித்தும், அவர்கள் முன்வைத்த பார்வைகளும், செயல்பாடுகளும் பெண்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றன.


ஆனால், இன்று பெண்கள் தினம் என்பது அதீத கொண்டாட்டத்துக்கு உரியதாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், சமீப ஆண்டுகளில்தான் `பெண்கள் தினம்’ பெண்கள் மற்றும் மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.



90-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார கொள்கைகள், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவை காரணமாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு கூறுகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சர்வதேச சந்தைப்படுத்துதல். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் ஆவர். ஆகவே, பெண்களை மையப்படுத்தி வியாபாரச் சந்தைகள் நுணுக்கமாகத் தோன்றின.


அழகிப் போட்டிகள் அதன் பிறகுதான் உருக்கொள்ள ஆரம்பித்தன. சிவப்பாக, மெல்லிய உடல்வாகுடன் இருக்கும் பெண்கள்தான் அழகு என்னும் எண்ணத்தை ஊடகத்தின் வாயிலாக விளம்பரங்கள் மூலமாக மெள்ள மெள்ள விதைக்கத் தொடங்கினார்கள். தெற்காசிய நாடுகளில் தங்கள் வியாபாரத் தளங்களை ஏற்படுத்தவும், வலுவாக்கிக்கொள்ளவும் அவர்கள் எடுத்த ஆயுதம்தான் பெண்களின் அழகு குறித்த சிந்தனை.



இதன் காரணமாகப் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள் இவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இங்கு பரப்பின. உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப் போட்டிகள் நடத்தி இந்தியப் பெண்களை அழகிகள் என உலகுக்கே காட்டினர். அவர்களை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து, அவர்கள் வாயிலாக தங்கள் நிறுவன அழகு சாதனப் பொருள்களை சந்தைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்களை பயன்படுத்தினால் நாமும் அழகாகிவிடுவோம் என்ற மாயத் தோற்றத்தில் பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்துகொண்டிருக்கிறார்கள்.


இதன் தொடர்ச்சியாகவே சர்வதேச பெண்கள் தினமும் அப்படியொரு சந்தைப்படுத்துதலில் சிக்கிக்கொண்டதோ என்னும் எண்ணம் எழுகிறது. அரசாங்கம் பல்வேறு தினங்களை அறிவித்திருக்கிறது. அதைக் கொண்டாடியும் வருகிறது. இவ்வாறு கொண்டாடுவதன் மூலமாக அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள், அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான்.


ஆனால், இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் காதலர் தினத்தைப் போலவே சர்வதேச பெண்கள் தினமும் ஒருநாள் கொண்டாட்டமாக ரொமான்ட்டிசைஸ் செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் என்பது இன்று அதன் முக்கியத்துவத்தை இழந்து அன்றைய மனமகிழ்ச்சிக்கு அல்லது கொண்டாட்டத்துக்கு மட்டுமே என மாறி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.



மார்ச் - 8 - மகளிர் தினம், கொண்டாடுவதற்கு மட்டுமல்ல! பெண்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும்தானா, அதன் பின்னர் இருக்கும் அரசியல் என்ன என்பதை பற்றி ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். பெண்கள் தினத்தன்று தொலைக்காட்சிகளில், பண்பலை நேரலைகளில் ஒருபக்கம் மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பெண்களையும், மறுபுறம் இவை பற்றி எதுவும் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும், கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை செய்பவர்களையும் காண்பிப்பார்கள். அவர்களுக்கு மகளிர் தினம் என்றால் என்ன என்பது தெரியாது. பெண் உரிமை, பெண் விடுதலை பற்றித் தெரியாது. பெண் கல்வி பற்றி தெரியாது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது தெரியாது. அவர்கள் பாட்டுக்கு அன்று கூட மழையில், வெயிலில், வயற்காட்டில், வீட்டில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியெனில், இந்த இருவேறு காட்சிகள் ஏன் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.


இதுதான் யதார்த்தம். உண்மை. ஒருபுறம் மகளிர் தினத்தை அதிகமாக ரொமான்ட் டிசைஸ் செய்துகொண்டே இன்னொரு புறம் ஒரு பகுதிப் பெண்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறோம். பெண்கள் தினத்தை நாம் கொண்டாட ஆரம்பித்த நாளிலிருந்தே இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. எல்லா பெண்களையும் உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டம்தானே சரியாக இருக்க முடியும்? ஒரு பகுதி பெண்கள் அதுகுறித்த எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதற்கு எது காரணம்? பெண்களிடையே நிலவுகின்ற பழஞ்சிந்தனைகள் தான்.



மகளிர் தினம் கொண்டாடினால் மட்டும் போதுமா?

கல்வி சார்ந்த பணிகள் உயர்வானவை, கற்றறிந்த பெண்கள் தான் உயர்வானவர்கள், உடலுழைப்பு சார்ந்த வேலைகள் தாழ்ந்தவை, படிக்காத பெண்கள் தாழ்ந்தவர்கள் என எண்ணுதல்தான் மிகப்பெரிய காரணம். இந்த மேட்டிமைத் தனத்தில் இருந்து, மேட்டிமைச் சிந்தனையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். மகளிர் தினம் என்பது எல்லா பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப் பட்ட, உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்துவரும் பெண்களையும், பெண்களோடு, பெண் அரசியலோடு இணைக்க வேண்டும். இது நிகழவில்லை என்றால் மகளிர் தினம் கொண்டாடுவதில் என்ன பயன்? ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிர்பயாவுக்காக தெருவில் இறங்கிப் போராடிய நாம், பாலியல் வன்முறைக்குப் பலியான அரியலூர் சிறுமிக்காகவோ, தேனி சிறுமிக்காகவோ, சேலம் சிறுமிக்காகவோ ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லை? பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண் என்னும் பாலினம் மட்டுமன்று. மாறாக சாதி, மதம், வர்க்கம் எல்லாமுமே செயல்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.


எப்போதெல்லாம் எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் அங்கெல்லாம் பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்டத்தின் நியாயங்களை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதும்தான் பெண்களுக்கு உண்மையான மகளிர் தினக் கொண்டாட்டம்.