#Bangalore.
பெங்களரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வாகனங்கள் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்தினால், ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்யவும், மற்றும் இதர பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் கூடுமானவரை குடிநீரை சேமிக்கும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர் தொட்டிகளில் சுமார் 130 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கிடைக்கிறது. இதைத்தவிர, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தினமும் 60 கோடி லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது. இவையே, குடிநீர் தவிர இதர பணிகளுக்கு போதுமானதாக இருக்கும்,” என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறினார்.
திங்கள்கிழமை பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன்மூலம் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களுக்குத் தேவையான மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
Post a Comment
Post a Comment