நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் ஜனாஸா இன்று காலை மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாய்ந்தமருதை சேர்ந்த ரிஸ்வான் முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவனின் ஜனாஸா இன்று மதியம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவரும் விடயம் யாதெனில், சாய்ந்தமருதின் பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அன்று மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக உயிர் தப்பிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் தேடி அலைந்து இந்த ஜனாஸாக்களை மீட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கௌரவ எம்.ரீ.சபீர் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஏ. பசீல், ஆர். விமலேந்திரன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment