மலையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை




 


வி.சுகிர்தகுமார் 0777113659   

  வெள்ளப்பாதிப்பால் சேதமடைந்த விவசாய செய்கையினை அறுவடை செய்ய மறுக்கும் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறும் இடத்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்திலும் இவர்கள் விவசாய அறுவடையில் ஈடுபட முடியாத வண்ணம் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்ட விவசாயிகளின் நிலை மலையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாக மாறியுள்ளது. இந்நிலை தொடர்பில் விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அம்பாரை தோணிக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பாதிப்புக்கு பின்னர் அறுவடை ஆரம்பமான நிலையில் சில அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் செயற்பாடுகள் காரணமாக மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
வெள்ளத்தினால் வீழ்ந்துள்ள வேளாண்மை செய்கையினை அறுவடை செய்ய சில அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும்; இதனால் தமது விவசாய செய்கையினை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பது மற்றுமொரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் தலையீடு செய்து உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை உடன் எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நம் நாட்டை பொறுத்தவரையில் விவசாயத்துறை அபிவிருத்தியில் அம்பாரை மாவட்டமும் கணிசமான அளவு பங்களிப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் பலரது வயல் நிலங்களும் சேதமாக்கப்பட்டது. இதனால் விளைச்சலிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சிறிய குளக்கட்டுகள் வாய்க்கால்கள் வரம்புகள் போன்றவற்றிலும் பாரிய முறிவுகள் ஏற்பட்டு பல இலட்சம் ரூபா செலவு செய்து சீர்படுத்தப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய தீர்வினை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.