"வாழும் தேசத்தையும் தேசியத்தையும் நேசிப்பதும் பாதுகாப்பதும் அனைவரது கடமையாகும்"





நூறுல் ஹுதா உமர்


இலங்கை திரு நாட்டின் சுதந்திரத்திற்காக  முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்புகள் மகத்தானது. அவ்வாறே நாம் வாழ்கின்ற தேசத்தையும் தேசியத்தையும் நேசிப்பதும் பாதுகாப்பதும்  எமது கடமையாகும்

இவ்வாறு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ சம்சுதீன் (ஹாமி) தெரிவித்தார்

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை யொட்டி நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்த நிகழ்வில் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபையின் உப தலைவர் அல் ஹாஜ் ஏ.எம்.இப்றாகீம் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

இதன் போது காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபையின் செயலாளர் ஏ புஹாது, இணைச் செயலாளர் அல் ஹாஜ் யூ.அப்துல் வாஹிட் உட்பட உலமாக்கள் மாணவர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் அதிபர் அஷ்ஷெய்க் ஏ சம்சுதீன் (ஹாமி)
மேலும் தெரிவித்ததாவது,

ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்த இந்த நாட்டின் சுதந்திரத்திற்கான வரலாற்றில் மஹியங்கனை பம்பரகந்த கிராமத்தில் ஒளிந்திருந்த மன்னனை காப்பாற்றியது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரே யாகும்

வாள் ஏந்திய சிங்கக் கொடியை இந்த நாட்டு மக்களும் சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற   பிரேரணையை மசோதாவை டி எஸ்  சேனநாயக்கா கொண்டு வந்தபோது அந்தப் பிரேரணையை தைரியமாக அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் முன்மாதிரியாக வழிமுறைந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அகமட் சின்னலெப்பை ஆவார்.

இவ்வாறு இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டினுடைய இறைமைக்காகவும், தேசிய ஒற்றுமைக்காகவும் அரும்பாடு பட்டவர்கள் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி,  தமிழ் மக்களும் பெரும்பான்மை இனத்தவர்களோடு இணைந்து அர்ப்பணித்த வரலாறுகளை நாம் காணக்கூடியதாக உள்ளது

அந்த வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை பெரும்பான்மை மக்களுடன் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் கொண்டாடுவதற்கு மிகவும் தகுதியான சமூகமாக தமிழ் - முஸ்லிம் சமூகம் திகழ்கிறது.

அவ்வாறே நாம் பிறந்த தாய் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் அரசியல் பொருளாதார வளர்ச்சிக்காகவும் நாம் ஒவ்வொருவரும் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது .

நாம் ஒவ்வொருவரும் வாழுகின்ற தேசத்தையும் தேசியத்தையும் நேசிப்பதும் அதனை பாதுகாப்பதும் அதன் ஒருமைப்பாட்டை பேணி காப்பதும் எமது கடமையாகும் எனக் கூறினார்

இதன்போது இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்று தருவதற்காக பாடுபட்டு உழைத்த பெரியார்கள் நினைவு கூறப்பட்டதுடன்,   நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் மற்றும் இலங்கையின் அரசியல் பொருளாதார ஸ்திரத் தன்மைக்காக வேண்டி விசேட துவா பிரார்த்தனை இடம் பெற்றது