(நூருல் ஹுதா உமர்)
"ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்" என்ற பெயரில் இஸ்ரேலுடன் சேர்ந்த இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கூட்டமைப்பை ஆதரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செங்கடலைப் பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையை அனுப்ப எடுத்திருக்கும் முடிவு பலஸ்தீன் தொடர்பில் ஜனாதிபதி கொண்டிருக்கும் நிலைப்பாடு மற்றும் சித்தாந்தத்துடன் முரண்படுவதாக முற்போக்காக சிந்திக்கும் அரசியல்வாதி என்ற வகையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
அத்துடன் செங்கடல் பாதுகாப்பு தொடர்பில் கடற்படையினரை நிலைநிறுத்த ஜனாதிபதி தீர்மானிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டினால் இது தொடர்பில் ஆளும் தரப்பினதும் மற்றும் எதிர்க்கட்சிகளினதும் கருத்துக்களை கேட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கடற்படையை நிலைநிறுத்த தீர்மானித்தால், பாலஸ்தீன விடுதலைப் போரில் இரட்டை வேடம் போடும் அரசியல் சக்திகளின் இரட்டை முகம் வெளிப்பட்டு அவர்களை இந்நாட்டின் முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் அறிந்து கொள்வர்.
மேலும், செங்கடலுக்கு கடற்படையை அனுப்புவதன் மூலம், பல தேவையற்ற பூகோள அரசியல் பிரச்சினைகளை இலங்கை தேசம் சந்திக்க நேரிடலாம். அது மட்டுமில்லாது பாலஸ்தீனுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் கண்ணுக்கு தெரியாத பலமான கரங்கள் மற்றும் அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்களை நம் தாய்நாடு எதிர்கொள்ள நேரிடும். நாம் அதை பலமாக எதிர்கொள்ள முடியுமா என்பது போன்ற விடயங்களை நாம் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத சூழலில், மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிவதை அறியாமல், இதுபோன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மீதான சவால்கள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறாமல் போகலாம். நமக்கும் முஸ்லிம் நாடுகளுக்குமிடையிலான நட்புறவும் சேதமடையலாம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Post a Comment
Post a Comment