இரான் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி




 


இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசெம் சுலேமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது.

ஊடகம் சார்பாக வெளியான காணொளியில், தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன எனவும், இந்த தாக்குதலில் 171 பேர் காயமடைந்ததாகவும் அரசு செய்தி தொடர்பாளர் இரிப் கூறினார்.

மேலும் இது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கெர்மனின் துணை ஆளுநர் அந்த காணொளியில் கூறியுள்ளார். இரானின் ஒரு சாலையில் பல உடல்கள் கிடப்பதை இணையத்தில் வைரலான அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

2020இல் அண்டை நாடான இராக்கில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசெம் சுலேமானியை நினைவுகூரும் நாளின் ஒரு பகுதியாக புதன்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கல்லறையை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.