அம்பாரையில் அறுவடைக்கு தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில்





 வி.சுகிர்தகுமார் 0777113659 


 அம்பாரை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்துவரும் நிலையில் குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் 106 குடும்பங்களை சேர்ந்த 275 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
இவர்களுக்கான சமைத்த உணவு உள்ளிட்ட வசதிகள் தனவந்தர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதுடன் அரச உதவியினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தின் 30195 குடும்பங்களை சேர்ந்த 97978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகள் முழுமையாகவும் 143 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதேநேரம் 7151 குடும்பங்களை சேர்ந்த 21507 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 110 அடியினை தாண்டி மேலதிக நீர் வெளியேறி வருகின்ற நிலையில் சகல குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றது.
இதனால் அறுவடைக்கு தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல குளங்களிலும் நீர் நிரம்பி வருவதுடன் சாகாமம் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து ஸ்பீல் ஊடாக வழிந்தோடுகின்றது.
சாகாமம் பிரதான வீதியின் நீத்தை ஆற்றின் அருகில் மதகு மீதாக வெள்ளம் பாய்ந்துவரும் நிலையில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. மழை குறைவடைந்தபோதும் வெள்ளம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் சின்னமுகத்துவாரம் உள்ளிட்ட நீர் வடிந்தோடும் பிரதேங்களை பார்வையிட்டதுடன் நீர் வடிந்தோடுவதற்கு தடையாகவுள்ள பனங்காடு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரங்களையும் அகற்றும் நடவடிக்கையினை எடுத்ததுடன் கிராமங்களின் நிலை தொடர்பிலும் நேரில் கண்டறிந்து கொண்டு மாவட்ட செயலகத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளார்.