சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றம்





வி.சுகிர்தகுமார் 0777113659 


 அம்பாரை மாவட்டத்தில் அடை மழை பெய்துவரும் நிலையில் சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
சமுத்திரத்தின்   நீர் மட்டம் 105 அடியாக காணப்படுவதுடன் தற்போது 1 அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நண்பகலுக்கு பின்னர் 2 அடி திறக்கப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார்
நேற்றைய தினம் மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அரச உயர் அதிகாரிகளின் கூட்டத்தின் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாவட்டத்தின் தாழ் நில பிரதேசங்கள் மற்றும் நீர் நிலைகளை அண்டி வாழும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அத்தோடு ஆறுகள் குளங்கள் ஏரிகளில் மீன் பிடியில் ஈடுபடுவதையும் வெள்ள நீரில் மக்கள் நீராடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதனால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பொத்துவில் பிரதேசத்தில்; அதிகூடிய 101.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  நாவின்த தெரிவித்தார்.
 இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மகா ஓயா பிரதேசத்தில் 81.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் ரூபஸ்குளத்தில் 75.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் தீகவாபி 72.6 இலுக்குசேன 70.0 இங்கினியாகல 57.0 பாணம பிரதேசத்தில் 54.1 அக்கரைப்பற்றில் 51.3 லாகுகல 46.7 அம்பாரை 39.3  மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் குறிப்பிட்டளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் கல்முனை நிந்தவூர் காரைதீவு  அம்பாரை உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
 வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில் சில குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் தாழ் நிலப்பகுதிகளும் சில வீpதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீர் வழிந்தோடுவதுடன் பனங்காட்டு பாலத்தின் கீழாக நீர்த்தாவரங்கள் சூழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெள்ள நிலை தொடர்பில் பிரதேச செயலகமும் பிரதேச சபையும் கண்காணித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.